கொரியர் சேவை ஊடாக போதை மாத்திரைகளை பெற்று யாழில் வியாபாரம் செய்த இளைஞன் கைது


கொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்துக்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையம் ஒன்றுக்கு சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த பொதி தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, அந்த பொதியை பொலிஸார் பெற்று சோதனையிட்ட போது, அதனுள் 1800 போதை மாத்திரைகள் இருந்துள்ளன. அதனையடுத்து குறித்த பொதி சேர்ப்பிக்கப்படவேண்டிய விலாசத்துக்கு உரிய பெயருடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த பொதியை கொழும்பில் இருந்து அனுப்பிவைத்த நபர் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.