வாடகை வீடுகள் மூலம் நிதி மோசடிகள்: கட்டிட உரிமையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!


வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் தங்குமிடங்கள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக, கட்டிட உரிமையாளர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட குழுக்கள், இவ்வாறான இடங்களை வாடகைக்கு எடுத்து ரகசியமான முறையில் இணையத்தளம் ஊடாக பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது பிரிவின் கீழ், தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

வீட்டின் உரிமையாளர் அல்லது பிரதான குடியிருப்பாளர், அங்கு தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள், வேலை ஆட்கள் மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பற்றிய விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

குடியிருப்பாளர்கள் மாறும் போது (புதியவர்கள் வருகை தருதல் அல்லது தங்கியிருந்தவர்கள் வெளியேறுதல்) அது குறித்து உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறான விபரங்களை வழங்கத் தவறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் உரிமையாளர்கள் தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக நேரிடும்.

தமது சொத்துக்களை வாடகைக்கு வழங்கும் போது, அதனைப் பெறுபவர்களின் அடையாளம் மற்றும் நோக்கம் குறித்து மிகக் கவனமாக ஆராயுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமது பிரதேசத்தில் தங்கியிருக்கும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நபர்கள் எவரேனும் சட்டவிரோத அல்லது சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிந்தால், உடனடியாக அறியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.