கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த நபரையும் நிறுத்தி போக்குவரத்து பொலிஸார் சோதனையிட்டனர். அவ்வேளை மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை காட்டியுள்ளார்.
குறித்த தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் கடந்த 2024ஆம் ஆண்டு யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பொலிஸாரால் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி (01.08.2024) தற்காலிகமாக சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றை வழங்கியதுடன் அதனை தொடர்ந்து போலியான கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை பயன்படுத்தி தற்காலிக போலியான சாரதி அனுமதிப் பத்திரத்தை 8 முறை நீடித்து கொடுத்துள்ளார். என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் இறப்பர் துர்திரை ஒன்றை மீட்டதுடன் போலி தற்காலிகமான சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த குறித்த நபரை கைது செய்து மட்டு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை நாளை 12ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதன் பின்னர் போலியான ஆவணங்களை தயாரித்து வழங்கி வந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை செவ்வாய்க்கிழமை (12) பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ய அழைப்பு விடுத்த நிலையில் அங்கு சென்ற அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை புதன்கிழமை 13 ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.




.jpg)







