சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான உலகளாவிய சாசனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் ; இலங்கைக்கான யுனிசெப் வெளியிட்ட அறிக்கை


 சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான உலகளாவிய சாசனத்துக்கு (Global Charter for Child Care Reforms) மே 4ஆம் திகதி அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை யுனிசெப் வரவேற்கிறது.

இது சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள 'மாற்றுப் பராமரிப்புக் கொள்கை'யை (Alternative Care Policy) மேலும் உத்வேகத்துடன் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் எடுக்கப்பட்ட ஒரு மைல்கல் தீர்மானமாகும் என இலங்கைக்கான யுனிசெப் தெரிவித்துள்ளது.இன்று (7) இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

கடந்த பல வருடங்களாக, பராமரிப்புச் சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்துச் செயற்பட்டு வருகின்றது.

தேசிய மாற்றுப் பராமரிப்புக் கொள்கையை உருவாக்குதல், வதிவிட பராமரிப்பு நிறுவனங்கள் தொடர்பான தேசியக் கணக்கெடுப்பை நடத்துதல் மற்றும் மாகாண ரீதியிலான செயற்றிட்டங்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவை இதில் அடங்கும். இத்தகைய முயற்சிகளின் விளைவாக, 2018ஆம் ஆண்டிலிருந்து நிறுவன ரீதியான பராமரிப்பில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் குறைந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாத்திரம் 6,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இத்தகைய நிறுவனங்களில் சேர்க்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 2,000 சிறுவர்கள் மீண்டும் அவர்களது குடும்பங்களுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளனர். தலைமைத்துவம், சான்றுகள் மற்றும் கூட்டாண்மை ஆகியவை ஒன்றிணையும்போது எத்தகைய சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு இந்த வெற்றிகள் சான்றாகும்.

இருப்பினும், இலங்கையில் இன்னும் 8,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வதிவிட பராமரிப்பு நிலையங்களில் வளர்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்குக் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரேனும் உயிருடன் உள்ளனர்.

வறுமை, வன்முறை மற்றும் துஷ்பிரயோகம், சமூகக் களங்கம் அல்லது சமூக அடிப்படையிலான சேவைகளில் உள்ள இடைவெளிகள் போன்ற காரணங்களே இச்சிறுவர்கள் குடும்பங்களை விட்டுப் பிரிவதற்குக் காரணமாக அமைகின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, உலகளாவிய சாசனம் ஒரு பெறுமதியான வழிகாட்டுதலை வழங்குகிறது. அவசியமற்ற முறையில் குடும்பங்களிலிருந்து சிறுவர்கள் பிரிக்கப்படுவதைத் தடுத்தல், குடும்பம் சார்ந்த பராமரிப்புக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட பராமரிப்பு முறையிலிருந்து படிப்படியாக விலகுதல் ஆகிய இதன் கொள்கைகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மாற்றுப் பராமரிப்புச் சீர்திருத்தங்களுடன் ஒத்துப்போகின்றன.

கொள்கைகள் அவசியமானவை என்றாலும், நிதி ஒதுக்கீடு மற்றும் முறையான அமுலாக்கமே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும். வழக்கு முகாமைத்துவக் கட்டமைப்புகளை (Case Management Systems) வலுப்படுத்துதல், குடும்ப ஆதரவு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஒவ்வொரு சிறுவனும் பாதுகாப்பான மற்றும் ஆதரவான குடும்பச் சூழலில் வளர்வதை உறுதி செய்தல் ஆகியவையே இன்றைய தேவையாகும்.

இந்த அர்ப்பணிப்பைச் சிறுவர்களுக்கான நிலையான மாற்றமாக மாற்றுவதற்கு அரசாங்கம், மாகாண அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பங்காளிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க யுனிசெப் தயாராக உள்ளது.