
போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டுச் சபை வியாழக்கிழமை (7) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதைத் தடுத்து, அவற்றை சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு இதன்போது அறிவுறுத்தினார்.
இந்தச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தி, பொதுமக்கள் மற்றும் இந்த தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களிடையே நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரையும் ஒன்றிணைத்து 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டை இதன் மூலம் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
"முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகள் மற்றும் கைது நடவடிக்கைகள் உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், இந்தத் தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகள் 80% இனால் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
"முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025.10.30 ஆம் திகதி முதல் இதுவரை 5437.457 கிலோ கிராம் கஞ்சா, 1936.325 கிலோ கிராம் ஹெரோயின், 1991.414 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 271.724 கிலோ கிராம் கொக்கைன், 1,574,895 போதை மாத்திரைகள் மற்றும் 629,988 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக 168,460 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இங்கு ஆராயப்பட்டது. இதன்போது, 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வு (திருத்த) சட்டமூலத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. புனர்வாழ்வு செயல்முறை, அதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய உத்திகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
புனர்வாழ்வு செயல்முறை, அதற்காக பின்பற்றப்பட வேண்டிய மூலோபாயங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு பெற்ற பின்னர், அவர்கள் மீண்டும் அதற்கு அடிமையாவதைத் தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக ஆளுமை மற்றும் மனப்பாங்கு அபிவிருத்தித் திட்டங்கள், வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்ட பயிற்சித் திட்டங்கள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளுக்கான உதவிகளை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், பிரதேச செயலக மட்டத்திலான போதைப்பொருள் பாவனையினால் அதிகம் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கான மனப்பாங்கு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், அந்த அனைத்துத் திட்டங்களையும் அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விலகியிருப்பது குறித்த விழிப்புணர்வுத் திட்டங்களை நடத்துவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், அந்தச் செய்தி சமூகத்தை முறையாகச் சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, பிரதேசத்தின் மகா சங்கத்தினர் உட்பட மதத் தலைவர்களின் தலையீட்டுடன் இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காகத் தனியான நீதிமன்றத்தை நிறுவுதல், இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதை விரைவுபடுத்துதல் மற்றும் வழக்குத் தொடர்வதை துரிதப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் சிறையிலுள்ளவர்கள் சம்பந்தமான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, சிறைச்சாலை நெரிசலைத் தவிர்ப்பதற்கான விரைவான வேலைத்திட்டமொன்றின் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட தேரர்கள் குறித்த விசாரணைகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து பொலிஸ் மா அதிபர் இதன்போது விளக்கமளித்தார்.
பாடசாலை மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளைத் தடுப்பதற்காக, கல்வி அமைச்சு மற்றும் இலங்கை மகளிர் பணியகம் இணைந்து முன்னெடுக்கும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், ஜூன் 26 ஆம் திகதி, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மக்களை மையப்படுத்தி திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.



.jpg)








