.jpeg)
எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 ஆம் திகதி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 05 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம, ரூ. 500,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 10 மில்லியன் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனப் உறவினர்கள் என பொய்யாக தெரிவித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்ததை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 13ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் சரீரப் பிணை வழங்க வேண்டியிருந்தது.
இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்குச் சந்தேகநபர்கள் தலா ரூ. 15,000ஐ பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே அவர் கொள்ளுப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து கதவில் தொங்கிய நிலையில், அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.



.jpg)







