நிலக்கரி இறக்குமதி முறைகேடு - விசாரணைகளை ஆரம்பித்தது ஜனாதிபதி விசேட ஆணைக்குழு


2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளைக் கண்டறிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு, தனது ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

நிலக்கரி இறக்குமதி, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் அது சார்ந்த ஏனைய செயற்பாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து விசாரிப்பதே இந்த ஆணைக்குழுவின் முக்கிய பணியாகும்.

இந்த ஆணைக்குழு கொழும்பு 12, அதிக்கரன மாவத்தை, ‘அதிக்கரன பியச’ வளாகத்திலுள்ள நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் 05வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகள் குறித்து ஏதேனும் தகவல்கள் அல்லது சாட்சியங்கள் பொதுமக்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ இருந்தால், அவற்றை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.