நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இளைஞன் உட்பட இருவர் பலி!


 நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நேற்று புதன்கிழமை (06) இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - புத்தளம் வீதியில் 70ஆம் மைல்கல் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் நோக்கி பயணித்த லொரி ஒன்று, அதே திசையில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து பஸ் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாதம்பே, கல்முருவ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை - குறிகட்டுவான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் பயணித்த பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.