
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பஸ்ஸும் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து, பேருந்தில் பயணித்த ஒரு பாடசாலை மாணவர், விபத்தில் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் - பொககவந்தலாவை பிரதான வீதியில் உள்ள நோர்வூட் வென்சர் தோட்டப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை சுமார் 7.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.ஹட்டனில் உள்ள பாடசாலைக்கு பொகவந்தலாவையிலிருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு எதிர்த்திசையில், ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 20 ஆசிரியர்கள் பேருந்தில் பயணித்துள்ளனர் என கூறப்படுகிறது.
தற்போது, நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என நோர்வூட் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.


