காரைதீவில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு : இருவர் கைது



(பாறுக் ஷிஹான்)

சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (09 ) இரவு அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த இரண்டு சந்தேக  கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை(10) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கைதான இரு சந்தேக நபர்களையும் 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அத்துடன் நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதான   சந்தேக நபரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மற்றுமொரு சந்தேக நபரிடம் இருந்து 20 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.

குறித்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள் 80 ஆயிரம் ரூபா பணம் இலத்திரனியல் தராசு நவீன கைத்தொலைபேசிகள் என்பன சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம்.பிரியங்கரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஐஸ் ஹெரோயின் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் புத்தளம் மாவட்டம் உடப்பு பகுதி மற்றும் கல்முனை பகுதியை குறித்த சந்தேக நபர்கள் நிரந்திர வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பதுடன் காரைதீவு பகுதியில் வாடகை அடிப்படையில் வீடு ஒன்றினை பெற்று இக்கடத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.