விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத் தயார் - நாமல் ராஜபக்ஷ..

                         

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே எமது நிரபராதித்தன்மையை நிரூபிக்க சிறந்த வழியாகும். எனவே, விசாரணைக்காக அழைக்கப்படும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத் தயாராக உள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தருவாரா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

"அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அழுத்தங்களைப் பிரயோகித்து அல்லது அச்சமூட்டி இந்தப் பயணத்தை முன்னெடுக்க முடியாது. எமது நிரபராதித்தன்மையை உறுதிப்படுத்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதே சிறந்தது. ஆனால், அந்த விசாரணைகள் அழுத்தங்களின் அடிப்படையில் அல்லது ஒருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வாக்குமூலங்களை வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்தால், அங்கு நீதி கிடைக்காது."

"எதிர்க்கட்சியை விட அரசாங்கமே பல விடயங்களை மூடிமறைக்க முயற்சிக்கிறது. குறிப்பாக நிதியமைச்சில் இடம்பெற்ற 80 கோடி ரூபாய் மோசடி மற்றும் அது தொடர்பான மரணம் ஆகியவற்றைத் தற்கொலை எனக்கூறி அரசாங்கம் மூடிமறைக்க முயன்றதை நாம் கண்டோம். இவ்வாறான அனைத்து விடயங்கள் தொடர்பிலும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்."

தாம் எதனையும் தவிர்க்கப் போவதில்லை என்றும், எந்த நேரத்திலும் விசாரணைக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், தற்போதைய அரசாங்கமே பல பிரச்சினைகளில் இருந்து நழுவிச் செல்ல முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.