
அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு மகா புனிதத் தலங்களின் கௌரவத்தையும், அதன் தூய்மையையும் பாதுகாப்பதற்காகத் தங்களது வாழ்நாளை அர்ப்பணித்துள்ள துறவிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அவதூறுப் பிரச்சாரங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது பல்லேகம ஹேமரதன தேரர் உள்ளிட்ட துறவிகள் மீது பெண் ஒருவருடன் தொடர்புபடுத்தி கூறப்படும் விடயங்கள் உண்மையானவையா என்பதை ஆதாரங்கள் இன்றித் தீர்மானிக்கக் கூடாது என ராஜாங்கனை சத்தாரதன தேரர் விசனம் வெளியிட்டுள்ளார்.
அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள விசேட காணொளி ஒன்றின் ஊடாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுராதபுரத்திலுள்ள எட்டு மகா புனிதத் தலங்களுக்கும் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள், அங்குள்ள ஹேமரதன தேரருக்கு தனிப்பட்ட ரீதியில் வழிபாடு செய்வதற்காக வருவதில்லை. மாறாக, ஜய ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெலிசாய உள்ளிட்ட புனித இடங்களை வணங்குவதற்கே அவர்கள் வருகின்றனர். அந்தத் தலங்களின் பொறுப்பாளர்களாக விளங்கும் துறவிகள், அந்த இடங்களை முறையாகப் பேணுவதற்கான பாரிய பொறுப்பை ஏற்றுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்லும் போது அந்த இடங்களில் சேரும் மலர் கழிவுகள் மற்றும் ஏனைய குப்பைகளை அகற்றி, விடியற்காலையிலேயே முழு இடத்தையும் தூய்மைப்படுத்தி, மக்கள் வழிபாட்டிற்கு உகந்த நறுமணம் மிக்க சூழலைத் தயாரிப்பது துறவிகளின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் மிகக்கடினமான பணியாகும். இவ்வாறு அர்ப்பணிப்புடன் பணியாற்றி புனித பூமியைப் பாதுகாக்கும் துறவிகள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியுடன் பழி சுமத்துவது முறையற்ற செயலாகும்.
துறவிகளும் மனிதர்களே என்ற ரீதியில் அவர்களுக்குள் சில பலவீனங்கள் அல்லது குறைகள் இருக்கலாம். தற்போது பல்லேகம ஹேமரதன தேரர் உள்ளிட்ட துறவிகள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், குறிப்பாக பெண் ஒருவருடன் தொடர்புபடுத்தி கூறப்படும் விடயங்கள் உண்மையானவையா என்பதை ஆதாரங்கள் இன்றித் தீர்மானிக்கக் கூடாது. கைப்பற்றப்பட்டுள்ள ஆடைகள் மற்றும் இதர சான்றுகளைக் கொண்டு அறிவியல் ரீதியான மரபணுப் பரிசோதனைகள் மற்றும் முறையான சட்ட விசாரணைகள் மூலம் உண்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒருவேளை ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால், அதற்குத் தூண்டுதலாக இருந்த தரப்பினரும் பொறுப்புக் கூற வேண்டும். துறவியின் பணத்திற்கு ஆசைப்பட்டுச் சென்ற தாயும் மகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. குற்றம் இடம்பெற்றிருப்பது உறுதியானால், அதில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்குமே தண்டனை வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து, ஒரு தரப்பை மாத்திரம் குறிவைத்து ஒட்டுமொத்த பௌத்த தர்மத்திற்கே இழிவு சேர்ப்பது ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியாகவே அமையும்.
துறவிகள் வெறும் மதக் கடமைகளுடன் மாத்திரம் நின்றுவிடாமல், கொடிய நோய்த்தொற்று காலத்திலும் ஏனைய இடர் காலங்களிலும் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளைத் தாராளமாக வழங்கியுள்ளனர். குறிப்பாக வசந்த சமரசிங்க போன்றவர்களுடன் இணைந்து பல்லாயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கியமை, ரஜரட்டை பல்கலைக்கழக நிர்மாணிப்பில் பங்களிப்பு செய்தமை மற்றும் சுமார் 2000 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதல் எனப் பல்வேறு அளப்பரிய சமூகப் பணிகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஏனைய மதங்களிலும் தவறுகள் நிகழ்கின்ற போதிலும், திட்டமிட்ட முறையில் பௌத்த மதத்தையும் அதன் துறவிகளையும் மாத்திரம் குறிவைத்துத் தாக்குவது கண்டிக்கத்தக்கது. எவராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் அவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தனிப்பட்ட தவறுகளைச் சாட்டாக வைத்துப் புனிதமான பௌத்த தர்மத்திற்கு எதிராகச் செயற்படுவதை நாம் அனுமதிக்கப் போவதில்லை என்றார்.



.jpg)








