எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை வாகனக் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது


எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அந்தந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், இரண்டு வகையான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றஒன்றின் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டு 414 ரூபாயாகவும், ஒட்டோ டீசல் லீற்ற ஒன்றின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டு 382 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது

இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் டீசல் விலைகளும், மண்ணெண்ணெய் விலையும் மாற்றமின்றி அப்படியே பேணப்படும் என கூட்டுத்தாபனம் குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதன் காரணமாக, தம்மால் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி கருத்துத் தெரிவிக்கையில்:

"டீசல் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டதால் பாடசாலை போக்குவரத்து கட்டணங்களும் குறையும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். கட்டணத்தை அதிகரிக்கும் போது அதிகரிக்கிறார்கள், ஆனால் குறைக்கும் போது குறைப்பதில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த நேரத்தில் எங்களால் கட்டணத்தை குறைக்க முடியாது. ஏனெனில் 1,100 ரூபாயாக இருந்த கச்சா எண்ணெய் 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. டயர்களின் விலை 600 ரூபாயால் அதிகரித்துள்ளது. உதிரிப்பாகங்களின் விலைகளும் அவ்வாறே அதிகரித்துள்ளன. எனவே, எங்களது கட்டணங்களை குறைக்க வேண்டுமெனில், அரசாங்கம் தலையிட்டு இந்த அதிகரித்த விலைகளையும் குறைத்துத் தர வேண்டும். இல்லையெனில், எங்களால் கட்டணங்களை குறைத்து இந்த சேவையை தொடர்ந்து நடத்த முடியாது. மற்ற பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், இந்த நேரத்தில் எங்களால் கட்டண திருத்தம் செய்ய முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்."