இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம் : ஆசிய பசுபிக் பிராந்திய சட்ட சங்கம் கடும் எச்சரிக்கை ; அரசிடம் ஐந்து கோரிக்கைகள் முன்வைப்பு


இலங்கை உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்து, ஆசிய பசுபிக் பிராந்திய சட்ட சங்கம் தனது கடுமையான கவலைகளையும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக அச்சங்கம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,

முறையான திட்டமிடலின்றி அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் வயதெல்லை அதிகரிப்பு மாற்றம் போன்ற தற்காலிக நடவடிக்கைகள், நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கடுமையாக சீர்குலைப்பதுடன் அதன் சுதந்திரத்தையும் ஆபத்துக்குள்ளாக்குவதாக உள்ளது.

இந்த விவகாரத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே வெளியிட்டிருந்த கரிசனைகளுடன் எமது சங்கமும் முழுமையாக உடன்பட்டுள்ளது.

கடந்த மே 25 அன்று இலங்கை ஜனாதிபதிக்கு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பியிருந்த கடிதத்தில், தற்போதைய சூழ்நிலையில் பதவியில் இருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது 'நீதித்துறையில் தன்னிச்சையாக தலையிடும் ஒரு வெளிப்படையான முயற்சியாகவே' பார்க்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஜனநாயகம் சீராக இயங்குவதற்கு நீதித்துறை உண்மையாகவே சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதுடன், அரசியல் செல்வாக்கு, சமரசம் அல்லது முறையற்ற தலையீடுகள் போன்ற எந்தவொரு சந்தேகங்களுக்கும் இடமளிக்காத வகையில் அதன் நடுநிலைமை பேணப்பட வேண்டும்.

அத்துடன், சர்வதேச அமைப்பான பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் எழுப்பியுள்ள கவலைகளையும் கரிசனைகளையும் எமது சங்கமும் முழுமையாக ஆதரிக்கின்றது.

தற்போது, இலங்கையின் சிரேஷ்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அரசியலமைப்பின் 107(5) உறுப்புரையின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் அல்லது சட்டத்துறையின் ஏனைய பங்குதாரர்களுடன் எவ்வித முறையான கலந்தாலோசனைகளும் இன்றி, அரசாங்கம் இந்த அரசியலமைப்பு திருத்தத்தை தன்னிச்சையாக முன்னோக்கி நகர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எந்தவொரு நாட்டிலும் அரசியலமைப்பு திருத்தம் என்பது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும், அதை இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சுதந்திரமான மற்றும் தகுதியானதொரு நீதித்துறையே ஜனநாயகக் கட்டமைப்பின் மூலக்கல்லாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், ஆசிய -பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 32 பிரதம நீதியரசர்களால் 1997ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட, நீதித்துறையின் பதவிக்காலம் மற்றும் நிறைவேற்றுத்துறையுடனான உறவுகள் குறித்த கடுமையான எல்லைகளை வரையறுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'நீதித்துறை சுதந்திரம் தொடர்பான பீஜிங் பிரகடனத்தை' எமது நிலைப்பாட்டுக்கு சான்றாக சுட்டிக்காட்டுகின்றோம்.

அந்த வகையில் ஆசிய பசுபிக் பிராந்திய சட்ட சங்கத்தின் தலைவர் என்றவகையில் பின்வரும் விடயங்களை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக டி.எல்.யாப் குறிப்பிட்டுள்ளார். அவை பின்வருமாறு,

•நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொண்டு முன்நகர்த்துவதைத் தவிர்த்தல்.

•அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் இத்தகைய தற்காலிக திருத்தங்களை கைவிடல்.

•அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது பங்குதாரர்களுடனான முறையான கலந்தாலோசனை மற்றும் உரிய செயல்முறைகளைப் பின்பற்றுதல்.

•நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கெடுக்கும் மற்றும் அதன் சுதந்திரத்தை ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலிருந்தும் விலகியிருத்தல்.

•சட்டத்தின் ஆட்சியுறுதி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கான மரியாதையை பாதுகாப்பதை உறுதி செய்தல்.

என்பன அவையாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.