பௌத்த துறவிகளுக்கென விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும் – பலாங்கொட கஸ்ஸப்ப தேரர்.




இலங்கையில் பௌத்த துறவிகள் எதிர்கொள்ளும் ஒழுக்கநெறி, ஒழுக்கக் கோவை மீறல்கள் மற்றும் சிவில் பிரச்சினைகளை கையாள்வதற்கும், அவர்களின் உன்னத நிலையைப் பாதுகாப்பதற்கும் என பிரத்தியேகமான விசேட பௌத்த நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் வலியுறுத்தியுள்ளார்.

பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, திங்கட்கிழமை (29) காணொளி ஊடாக விசேட தர்ம போதனைகளையும் கருத்துக்களையும் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முதன்மையான கடமையாகும். துறவிகளின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் தனித்துவமான விசேட நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

1815 ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின் 5 ஆவது பிரிவின் கீழ் பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அக்கால அரசுகளுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பின் 2 ஆம் அத்தியாயத்தின் 9 ஆவது பிரிவின் பிரகாரம், இலங்கையில் பௌத்த மதத்திற்கு முதன்மையான இடம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்ப்பது அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத கடமையாகும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 10 மற்றும் 14 ஆவது பிரிவுகளின் 1 ஆவது உட்பிரிவின் ஊடாக ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் சிந்தனைச் சுதந்திரம், மதச் சுதந்திரம் மற்றும் வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான விசேட அரச கடப்பாட்டை அரசியலமைப்பு அரசுக்கு விதித்துள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் தனிநபர் விவாக, விவாகரத்து மற்றும் விசேட சிவில் சலுகைகளைக் கையாள்வதற்காக காதி நீதிமன்றங்கள் சட்டப்பூர்வமாக இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களின் கீழ், பொதுச்சட்டத்துக்கு முரணான 16 வயதுக்கு குறைந்தவர்களின் திருமணங்களும் சில சந்தர்ப்பங்களில் அங்கீகரிக்கப்படுகின்றன. ஆனால், அரசியலமைப்பில் மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட்ட பௌத்த சாசனத்தின் உன்னத துறவிகளுக்கான ஒழுக்கநெறிப் பிரச்சினைகளைத் தீர்க்க, இதுவரையில் ஒரு விசேட நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என்பது பெரும் வரலாற்றுத் துரோகமும் குறைபாடாகும்.

வரலாற்றில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற ஜனாதிபதிகள் பௌத்த சாசனத்துக்குப் பல்வேறு அச்சுறுத்தல்கள் நிலவுவதாக மேடைகளில் கூறிய போதிலும், துறவிகளுக்கான பிரத்தியேக நீதிமன்றங்களை சட்ட ரீதியாக உருவாக்கத் தவறிவிட்டனர். அதிகாரிகளினதோ அல்லது அரசியல் பின்புலம் கொண்ட தரப்புகளினதோ தலையீடுகள், தன்னிச்சையான செயற்பாடுகள் பௌத்த சாசனப் பாதுகாப்பில் எத்தகைய கடுமையான அச்சுறுத்தல்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன என்பதையும் நாம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். பௌத்த சாசனத்தின் சுயாதீனத் தன்மையைப் பேண அரசுகள் தவறியதன் விளைவாகவே, இன்று துறவிகள் சாதாரண சிவில் நீதிமன்றங்களுக்கு இழுக்கப்பட்டு அவமதிப்புகளுக்குள்ளாகும் அவலநிலை தொடர்கிறது.

சாதாரண சிவில் நீதிமன்றங்களில் பௌத்த துறவிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும், அவர்களின் காவி உடையை கழற்றுமாறு கோரப்படும் அவல நிலைகளும் புத்த சாசனத்துக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். அரசியலமைப்பின் மூலம் பௌத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை நிலைநாட்ட இத்தகையதொரு விசேட நீதித்துறை கட்டமைப்பு அவசியமானது என்றார்.