
எரிபொருள் விலை சூத்திர நிர்ணயத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் அதன் முழு பயனையும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (30) முன்னிலையாகி சாட்சியமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடி தொடர்பில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்தேன். இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதி மோசடி தொடர்பில் விடயங்களை குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போது அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களையும் குற்றவாளியாக்குவதற்கு முயற்சிக்கிறது.
2025 மற்றும் 2026ஆம் ஆண்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட போது மோசடி இடம்பெற்றுள்ளதை தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகமும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.
நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அது குறித்து எவ்வித விசாரணைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.
சிங்கப்பூர் நாட்டின் விலைச்சுட்டெண்ணுக்கு அமைவாகவே எரிபொருள் விலையை தீர்மானிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் தற்போது ஒரு லீற்றர் பெற்றோலை 220 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் டீசலை 230 ரூபாவுக்கும் வழங்கவேண்டும்.
மத்திய கிழக்கின் மோதல் நிலைமைக்கு மத்தியில் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.அப்போதைய சந்தர்ப்பத்தில் இருந்தே உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது. ஆகவே தேசிய மட்டத்தில் எரிபொருள் விலை குறைப்புக்கான நிர்ணய சூத்திரத்தை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என்றார்.










.jpg)
.png)
.jpg)
