அதிபர் வைரமுத்து பேரின்பநாயகம் 32 வருட கால கல்விப் பணியில் இருந்து ஓய்வு


(சித்தா)
மட்/பட்/செட்டிபாளைய மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய வைரமுத்து பேரின்பநாயகம் கல்விப் பணியில் ஆசிரியராகவும், அதிபராகவும் அளப்பரிய சேவையாற்றி 32 வருட கால கல்விப் பணியில் இருந்து இன்றைய (30.07.2026) தினம் ஓய்வு பெறுகின்றார்.

இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா போன்ற கல்விசார் தகைமைகளையும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியாகவும், முதுகலை மாணியாகவும் கல்வித் துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தார்.

மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்க ஆசிரியப் பணியில் ஆரம்ப நியமனத்தை வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் பெற்று தனது ஆசிரியப் பணியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து துறைநீலாவணை மகா வித்தியாலயம், உதயபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளில் அர்ப்பணிப்பான ஆசிரியப் பணியை ஆற்றினார். தொடர்ந்து துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும், அதனைத் தொடர்ந்து கோடைமேடு நவசக்தி வித்தியாலயம், பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயம், மகிளூர்முனை சக்தி வித்தியாலயம் மற்றும் பெரியகல்லாறு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் தனது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தினார். இறுதியாகச் செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்.

சிறந்ததொரு கல்விப் பணியாளராகவும், சமய மற்றும் சமூக சேவையாளராகவும் எல்லோராலும் அன்போடு மதிக்கப்பட்டார். வகுப்பறைகளில் அறிவை விதைத்ததுடன் நின்றுவிடாமல், சமூகத்தின் உயர்வுக்காகவும் ஆன்மீகப் பணிகளுக்காகவும் இவர் ஆற்றிய சேவைகள் என்றென்றும் போற்றுதலுக்குரியவை.