மட்டக்களப்பிலும் இந்திய தூதரக விண்ணப்ப மையம் ; ஜூலை 7 முதல் புதிய சேவைகள் ஆரம்பம்


இலங்கையில் இந்திய விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்திய குடியுரிமை (OCI), ஆவண உறுதிப்படுத்தல் (Attestation) உள்ளிட்ட தூதரக சேவைகளை வழங்குவதற்கான புதிய வெளிச்சேவை வழங்குநராக (Outsourcing Service Provider - OSP) Alhind Global Services நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், 2026 ஜூலை 7 ஆம் திகதி முதல் Alhind Global Services நிறுவனம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டியிலுள்ள உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களிலுள்ள இந்திய துணைத் தூதரகங்களின் சார்பில் குறித்த சேவைகளை வழங்கவுள்ளது.

மேலும், தூதரக சேவைகளை மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் (Indian Consular Application Centre - ICAC) புதிதாக திறக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிழக்கு மாகாண மக்களுக்கு இந்திய விசா மற்றும் ஏனைய தூதரக சேவைகளைப் பெறுவதற்காக தொலைதூர பகுதிகளுக்கு பயணிக்க வேண்டிய அவசியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 7 முதல் விசா, கடவுச்சீட்டு, OCI மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான முன்பதிவுகளை ICAC Sri Lanka இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதேபோல், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் அமைந்துள்ள புதிய ICAC மையங்களில் சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.