
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளது.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
போலியான வாக்குறுதிகள் மற்றும் கடந்த அரசாங்கங்கள் மீதான பெறுப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலில் வெற்றிப் பெற்றார். ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இன்றுவரை அரசியல் பழிவாங்களுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. மாறாக மக்களின் மீதே அதிக வரி சுமை திணிக்கப்பட்டுள்ளது. திறைசேரி நிரம்பி வழிகிறது என்று குறிப்பிட்டுக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தை மகிழ்விப்பதால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது. ஆகவே மக்களுக்கு நிவாரணமளிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.
தற்போதைய தருணத்தில் தேர்தல் ஒன்று இடம்பெறுமாயின் மக்கள் அரசாங்கத்துக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். மாகாணசபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும்.
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளது.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்.மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற செயற்குழு உரிய காலத்தில் அறிக்கை சமர்ப்பிக்காது. காலத்தை மாத்திரம் இழுத்தடிப்புச் செய்யும் என்றார்.








.jpg)

.png)
.jpg)

