இளைஞர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகள் அதிகரிப்பு , வாகனங்களை இளம் வயதினரிடம் ஒப்படைக்கும் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் - பொலிஸார் எச்சரிக்கை


அதிவேகப் பயணம் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டம் காரணமாக இளைஞர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் அதிகரித்து வருவதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) எப்.யூ. வூட்லர், அண்மையில் பதிவாகிய பெரும்பாலான விபத்துகளில் இளைஞர்களே சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதுதான் முக்கிய காரணமாக இருப்பதாகவும் கூறினார்.

இளம் வயதினரிடம் வாகனங்களை ஒப்படைக்கும் பெற்றோர், அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அதிவேகப் பயணம் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டத்தை சட்டங்களால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்பதுடன், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ASP வூட்லர் தெரிவித்தார்.