வடக்கு, கிழக்கில் மட்டும் மாகாண சபைத் தேர்தல் நடத்த அரசு திட்டம் - விமல் வீரவன்ச



அடுத்த வருடத்தின் முதல் 06 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் மாகாண சபைத் தேர்தலை நடத்தி, நீதிமன்ற சவால்களுக்கு அப்பாற்பட்ட வகையில் தனி காணி மற்றும் பொலிஸ் அதிகார சட்டங்களை உருவாக்க தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

கொழும்பில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் காரியாலயத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அடுத்த கட்ட சதி என்னவென்றால், அடுத்த வருடத்தின் முதல் 06 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரம் மாகாண சபைத் தேர்தலை நடத்தி, அங்குத் தெரிவாகின்ற முதலமைச்சருக்குத் தேவையான ஆளுநரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துக் கொடுப்பார். அதன் பிறகு அவர்களுக்குத் தேவையான காணி மற்றும் பொலிஸ் அதிகார சட்டங்களை மாகாண சபை ஊடாகக் கொண்டு வருவார்கள்.

தற்போதைய அரசியலமைப்பின் படி பாராளுமன்றச் சட்டத்துக்கு எதிராக எவராலும் நீதிமன்றம் செல்ல முடிந்தாலும், மாகாண சபைச் சட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது என்ற சட்டச் சிக்கல் காணப்படுகின்றது. இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே அரசாங்கம் முற்படுகின்றது. ஆளுநராகத் தமக்கு வேண்டிய நம்பிக்கையானவர்களை நியமித்து, அந்த இரு மாகாணங்களிலும் தனிச் சட்டம், தனி காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை உருவாக்குவதே இவர்களின் பிரதான திட்டமாகும்.

இவர்களின் இறுதி எண்ணம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரைக் கூட இல்லாமல் செய்து, இந்த அடக்குமுறை இயந்திரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாகவும், பெரும்பான்மையினரின் வாக்குகளில் 10% அல்லது 15% வாக்குகளையும் பெற்று, மலையக வாக்குகளையும் பெற்று ஜனாதிபதியாகத் தொடர வேண்டும் என்பதாகும்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வென்றது சில லட்சம் வாக்குகளால்தான் என்பதையும், வெளிநாட்டு வாக்குகளுக்கு வாக்குரிமை வழங்க முயல்வது இந்தச் சதியின் ஒரு பகுதியே என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்பாராத விதமாகத் தமக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், சர்வதேச சக்திகளின் தேவைகளை நிறைவேற்றவும் ஜனநாயகத்தையும் சமூக ஒழுக்கங்களையும் குழிதோண்டிப் புதைத்து, எந்தவொரு கீழ்த்தரமான வேலைக்கும் செல்லத் தயாராக இருக்கும் அரசாங்கத்தின் இந்த ஆபத்தான அரசியல் ஆட்டத்தை அப்படியே வேடிக்கை பார்க்க முடியாது. அதனை முறியடிக்க இந்நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரளத் தயாராக இருக்கின்றன என்றார்.