கர்தினாலுக்கு எதிரான அவதூறுகள் அடிப்படையற்றவை - இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கை


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியையும் உண்மையையும் நிலைநாட்ட கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தனது ஏகோபித்த ஆதரவை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் வாயிலாக கர்தினாலுக்கும் ஏனைய அருட்தந்தைகளுக்கும் எதிராக பரப்பப்படும் அவதூறான கருத்துக்களை வன்மையாகக் கண்டித்து பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தி கர்தினால் தனது பதவிக்காலத்தை நீடிக்க முயல்வதாகக் கூறப்படும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது மற்றும் பொதுமக்களை திசைதிருப்பும் அற்பத்தனமான முயற்சியாகும்.

கத்தோலிக்க திருச்சபை சட்டத்தின்படி, ஆயர் ஒருவர் 75 வயதை எட்டும்போது தனது ஓய்வுக் கடிதத்தை திருத்தந்தைக்கு சமர்ப்பிக்க வேண்டும். எனினும், அந்த ஓய்வை ஏற்றுக்கொள்வதும் அல்லது பதவிக்காலத்தை நீடிப்பதுமான முழு அதிகாரம் திருத்தந்தைக்கு மட்டுமே உரியதாகும்.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது 75 ஆவது வயதில் ஓய்வுக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். திருத்தந்தையின் இறுதி முடிவு வெளிவரும் வரை அவர் தனது கடமைகளைத் தொடரவேண்டியது திருச்சபை சட்ட விதியாகும்.

அரசியல் அதிகாரப் போட்டிகளுடன் திருச்சபையின் நிர்வாகத்தை ஒப்பிட முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க கர்தினால் முன்னெடுக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய பணிகளுக்கு இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த கத்தோலிக்க சமூகமும் தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதாக கத்தோலிக்க ஆயர் பேரவை உறுதிபடத் தெரிவித்துள்ளது.
Beaches & Islands