சஜித் பிரேமதாசவும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது - ஜனபலய கூட்டமைப்பு திட்டவட்டம்


 இன்று பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எவையும் கொள்கை ரீதியானவை அல்ல. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கலாசார அமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொண்ட பல்வேறு ஊழல் நடவடிக்கைகள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளின் கோப்புகள் இன்றும் உள்ளன. எனவே சஜித் பிரேமதாசவும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது என ஜனபலய கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர குற்றம் சாட்டினார்.

கொழும்பு பொரளை என்.எம். பெரேரா கேந்திர மத்திய நிலையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஜனபலய கூட்டமைப்பின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

ஐக்கிய மக்கள் சக்தி என்பது சஜித் பிரேமதாச மற்றும் ஜலனி பிரேமதாச ஆகிய இருவரினதும் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் நோக்கங்களுக்காகவும் அமையப்பெற்ற ஒரு கட்சியாகும். லக்ஷ்மன் பொன்சேகா போன்ற நபர்களே அந்தக் கட்சியில் யாரை இணைப்பது அல்லது யாரை கட்சியை விட்டு நீக்குவது என்ற இறுதித் தீர்மானங்களை எடுக்கிறார்கள். மாறாக அதற்கு எந்தவொரு முறையான கொள்கைத்திட்டமும் கிடையாது.

அண்மையில் சரித் அபேசிங்க போன்றவர்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டுகளின் கீழ் சரித ஹேரத் போன்றவர்கள் நீக்கப்பட்டதால் மாத்திரம் சஜித் பிரேமதாச தம்மைக் தூய்மையானவராகக் காட்டிக்கொள்ள முடியாது. அவர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கலாசார அமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொண்ட பல்வேறு ஊழல் நடவடிக்கைகள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளின் கோப்புகள் இன்றும் உள்ளன.

கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த அதே காடையர்கள் மற்றும் தூய்மையற்ற நபர்களின் ஒரு பகுதியினரே இன்று ஐக்கிய மக்கள் சக்தியிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். பாதாள உலகக் குழுவின் தலைவனான ஹரக் கட்டா போன்றவர்களிடம் கூட சஜித் பிரேமதாச மற்றும் மொட்டு கூட்டணியின் முக்கியஸ்தர்கள் கப்பம் பெற்றுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த அரசியல் கட்சிகள் என்பவை சாதாரணமானவை அல்ல, பாதாள உலகத்தையும் விட கொடூரமான பாதாள உலகமாகவே இவை செயற்படுகின்றன.

எனவே, மகிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கூட்டணி, ரணில் விக்கிரமசிங்கவின் குழு மற்றும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு இடையே எந்தவொரு கொள்கை ரீதியான வேறுபாடுகளும் இல்லை. இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்றார்.