குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மெணிக்ஹின்ன பகுதியில், "முது" என்ற வளர்ப்பு யானை தாக்கியதில் 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு 8.00 மணியளவில் மெணிக்ஹின்ன கணதேவி விகாரை பூமிக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
"முது" என்ற வளர்ப்பு யானையின் தாக்குதலில் ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு, நான்காவதாக யானையின் உரிமையாளரின் 61 வயதுடைய சித்தப்பா உயிரிழந்துள்ளார்.
யானை கட்டப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த தானசாலையில் இருந்து பாண்களை எடுத்துவந்து, யானைக்கு உணவாக வழங்க முயன்ற போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யானை அந்த நபரைத் தாக்கிய போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்க கடுமையாகப் போராடிய போதிலும் அது தோல்வியில் முடிவடைந்தது.
தாக்குதலுக்குப் பிறகு, சடலத்தை அந்த இடத்திலிருந்து மீட்பதற்குக் கூட சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்த நிலையில், அந்த யானை, தாக்குதல் நடத்திய இடத்திலேயே நீண்ட நேரம் நகராமல் நின்றிருந்ததாகப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.








.jpg)

.png)
.jpg)

