
அமைதியான இலங்கை ஒன்றை கட்டியெழுப்புவதாக இருந்தால், ஒவ்வொரு குடிமகனும் தனது மொழியில் அரசுடன் தொடர்புகொள்வதற்கான உரிமையை நடைமுறையில் உறுதிப்படுத்த வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
'கிளீன் சிறீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ், அரச அலுவலகங்களில் பொதுச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் 23 பொது மாதிரி விண்ணப்பப் படிவங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டு வைக்க்கும் ஆரம்ப விழா, இன்று (01) கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
'எமது நாட்டில் நிலவிய யுத்தத்திற்கு மொழிப் பிரச்சினை ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அரச நிறுவனம் ஒன்றில் ஏதேனும் ஒரு சேவையைப் பெற்றுக்கொள்ளும்போது, தான் இரண்டாம் தரப் பிரஜை அல்ல, அனைவரும் சமமானவர்கள் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் ஏற்படவேண்டும். 23 பொது மாதிரி விண்ணப்பப் படிவங்களை மூன்று மொழிகளில் வழங்குவது சிலருக்கு சிறிய காரியமாகத் தோன்றலாம். ஆனால், இவ்வாறான சிறிய நடவடிக்கைகளே பாரிய சமூக மாற்றங்களுக்கு அடிப்படை என்று நான் நம்புகிறேன்.
பல் கலாசார, பன்மொழி மற்றும் பல மதங்களைக் கொண்ட சமுகமாக, இலங்கையில் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் அரச சேவைகளைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவது அரசின் அடிப்படை சமூகப் பொறுப்பாகும். ஒரு நபர் அரச நிறுவனத்திற்கு வரும்போது, தனது மொழி காரணமாக பயமோ, அசௌகரியமோ அல்லது இல்லாமல் போகும் என்ற உணர்வு இருக்கக்கூடாது.
அரசு என்பது அனைவருக்கும் சொந்தமான ஒரு பொது இல்லம். எனவே, அதன் கதவுகள் அனைத்து மொழிகளாலும் திறந்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து இன மக்களும் நம்பிக்கையுடன் வாழக்கூடிய அமைதியான இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், இந்த வேலைத்திட்டத்தை நடைமுறையில் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.









.jpg)

.png)

.jpg)