ஹபராதுவை ரயில் விபத்து: பேருந்து சாரதிக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை!



ஹபராதுவை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதிக்கு எதிராகக் குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக வீதிப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

கொட்டாவை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஹபராதுவை பகுதியில் ரயில் கடவையை கடக்க முயன்றபோது ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதிக்கு எதிராகக் குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) கொட்டாவ பகுதியைச் சேர்ந்த 63 பேரடங்கிய குழுவினர் கொக்கல அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளனர்.

பிற்பகல் 2.15 மணியளவில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது, ரயில் கடவையின் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் மணி ஒலித்துக்கொண்டிருந்த போதிலும், சாரதி அதனைப் பொருட்படுத்தாமல் பேருந்தை முன்னோக்கிச் செலுத்த முயன்றுள்ளார்.

ரயில் வருவதைக் கண்ட மாணவர்கள் கூச்சலிட்டுப் பேருந்தை நிறுத்தக் கோரிய போதிலும், சாரதி அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்து செலுத்தியதால் ரயிலின் முன்பகுதி பேருந்தின் பின்பகுதியில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் காராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில், ஒரு மாணவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் 8 மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய மாணவர்களுக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக கருத்து வெளியிட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், இது பேரழிவை ஏற்படுத்திய "யங்கல்மோதர ரயில் விபத்து" போன்றதொரு பாரிய சோகமாக மாறியிருக்கக்கூடும் எனவும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

சாரதியின் கடுமையான அலட்சியப் போக்கு காரணமாகவே இவ்விபத்து நடந்துள்ளதால், அவர் தற்போது போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.