நுவரெலியா, நானுஓயாவில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு – பல குடும்பங்கள் பாதிப்பு!

(செ. திவாகரன்)


நுவரெலியா மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக (26) திங்கட்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நுவரெலியா ரேஸ்கோர்ஸ் கிராமத்தில் பல வீடுகள் மற்றும் நுவரெலியா நகரில் முக்கிய வீதிகள் நீரில் மூழ்கின.

குறிப்பாக நுவரெலியா - பதுளை, நுவரெலியா - கண்டி மற்றும் நுவரெலியா - ஹட்டன் செல்லும் முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

நானுஓயா நகரப் பகுதிகள் கடும் மழையினால் பல தாழ்நிலை பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா நகர் பகுதியில் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டதால் பிரதான வீதிக்கு மேல் வெள்ளநீர் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன் பாதசாரிகள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பெய்துவரும் தொடர் மழையினால் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும் , அணையின் பாதுகாப்பைக் கருதியும், நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர் நிரம்பியதன் காரணமாகவும் நுவரெலியா கிரகரி வாவியின் வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர் வெளியேற்றப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் அருகில் ஓடும் நதியின் அதிகரித்து அபாய நிலையில் எட்டி உள்ளது தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.