
இலங்கையில் உயிருடன் வாழும் மிக வயதான ஆணாகக் கருதப்படும், கரந்தெனிய அங்குலுகல்ல பகுதியைச் சேர்ந்த பி.எச். மெனியல் தனது 111ஆவது வயதை எட்டியுள்ளதாக முதியோர் உரிமைகள் தொடர்பான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் திகதி பிறந்த மெனியல், தனது 111ஆவது வயதிலும் சிறந்த மனநலத்துடன் காணப்படுவதுடன், கூர்மையான நினைவாற்றலையும் தெளிவான கண்பார்வையையும் கொண்டுள்ளார்.
அவர் மகிழ்ச்சியுடனும் மனச் சுறுசுறுப்புடனும் இருப்பதாகவும், குடும்பத்தினரின் அன்பும் பராமரிப்பும் அவருக்குத் தொடர்ந்து கிடைத்து வருவதாகவும் முதியோர் உரிமைகள் தொடர்பான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
மெனியலுக்கு ஐந்து ஆண் பிள்ளைகள் மற்றும் நான்கு பெண் பிள்ளைகள் என மொத்தம் ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். அவரது மூத்த பிள்ளை உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய எட்டுப் பிள்ளைகளும் உயிருடன் ஆரோக்கியமாக உள்ளனர்.
மேலும், அவருக்கு 92 பேரப்பிள்ளைகளும் 12 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர்.
அவரது பிள்ளைகள் அனைவரும் இணைந்து அவருக்குத் தேவையான பராமரிப்பு, வசதிகள் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவரது நலனில் அக்கறை செலுத்தி வருவதாக முதியோர் உரிமைகள் தொடர்பான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் உயிருடன் வாழும் மிக வயதான ஆணாக அவரைக் கௌரவித்து அங்கீகரிக்கும் வகையில், முதியோர் உரிமைகள் தொடர்பான தேசிய செயலகம் மற்றும் கரந்தெனிய பிரதேச செயலக அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை ( 3) அவரது இல்லத்துக்குச் சென்று கௌரவித்தனர்.












