தெற்கு ஆழ்கடலில் 150 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு – ஐவர் கைது!



இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து, 150 கிலோகிராமிற்கும் அதிகமான எடையுடைய ஹெரோயின் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 300 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படை ஊடகப் பணிப்பாளர் கொமாண்டர் சமிந்த வலகுளுகே வழங்கிய தகவலின்படி,

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக 1 ஆம் திகதி காலை இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

'பஹன புதா' எனப் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த மீன்பிடிப் படகு, கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி கந்தற மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்டு அண்மையில் சேவையில் இணைக்கப்பட்ட தமது அதிநவீன 'சமுத்ர விஜய' கப்பலைப் பயன்படுத்திப் படகை வழிமறித்துள்ளனர்.

படகைச் சோதனையிட்ட போது, ஹெரோயின் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் 10 உர மூடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து படகு, போதைப்பொருள் மூடைகள், படகிலிருந்த 5 நபர்கள் மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி என்பவற்றை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

கைப்பற்றப்பட்ட படகும் சந்தேகநபர்களும் இன்று வியாழக்கிழமை (05) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குப் கொண்டுவரப்பட்டதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உதவியுடன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இச்சோதனையின் போது 100 பொதிகளிலான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 52 பொதிகளிலான ஹெரோயின் போதைப்பொருள் என்பன அடங்கிய எ மூடைகள் கண்டறியப்பட்டுள்ளன.

மொத்தப் போதைப்பொருளின் எடை 150 கிலோகிராமிற்கும் அதிகம் எனச் சந்தேகிக்கப்படும் அதேவேளை, எடையிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் துல்லியமான எடை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என கொமாண்டர் வலகுளுகே தெரிவித்துள்ளார்.