
1983 கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் தொடர்பான யோசனையை தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி முன்வைக்கவுள்ளார்.
12 இற்கும் மேற்படாத உறுப்பினர்களை கொண்டதாக முழுமையாக அதிகாரமளிக்கும் வகையில் குழு நியமிக்கப்பட்டு ஆறுமாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது.இதன்போது இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.அந்த யோசனையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1983ஆம் ஆண்டில் இடம்பெற்ற கறுப்பு ஜுலை கலவரம் காரணமாக பல தசாப்தங்களாக ஒரு நாடென்ற ரீதியில் பொருளாதார,சமூக, கலாசார ரீதியாக பின்னோக்கித் தள்ளப்பட்டு, அதன் காரணமாக ஆயிரக்கணக்கான பெறுமதிமிக்க உயிர்கள் பறிபோனதுடன், பாரிய அளவில் சொத்துகளும் சேதமுற்று பொருளாதார ரீதியாகவும் பாரிய பின்னடைவை எதிர்கொள்ள நேரிட்டது.
மக்கள் பிரிவினரிடையே அமைதியின்மை, அச்சம் மற்றும் சந்தேகம் என்பன அதிகரித்தமையே மேற்படி பௌதீகச் சேதங்களை விடவும் நாட்டிற்கு மிகவும் பாரதூரமான மற்றும் அழிவுகரமான சேதமாக அமைந்தது.
இலங்கையின் வரலாற்றில் மிகவும் மோசமான துன்பியல் நிகழ்வாகக் கருதப்படும் 1983 கறுப்பு ஜூலை சம்பவத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சொத்துச்சேதங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள உளவியல் மற்றும் சமூக ரீதியான உளவியல் ரீதியான பாதிப்புகள் என்பன இதுவரை முறையான விதத்தில் மதிப்பிடப்படவில்லை.
எதிர்காலத்தில் இவ்வாறான இனவாத மற்றும் நெருக்கடியான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு உறுதிமிக்க சட்டரீதியானதும், சமூகஞ் சார்ந்ததுமான நல்லிணக்கப் பொறிமுறையொன்றைத் தாபிப்பதற்கான தேவைப்பாடு எழுந்துள்ளது.
நம்பிக்கையையும், நல்லுறவையும் இலங்கையில் பல்வேறு இனங்களுக்கிடையில் நிலவும் நம்பிக்கையையும்,ந சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அத்தியாவசியமான ஒரு காரணியாக மாறியுள்ளது.
அத்தகைய சம்பவங்களுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும், மேற்படி அழிவுகரமான செயற்பாடுகளை வழிநடத்திய நபர்களையும் வெளிக்கொணர வேண்டும்.அச்சம்பவத்தால் பாதிப்புக்குள்ளான மற்றும் தீங்கிற்குள்ளான ஒட்டுமொத்த மக்களின் மனங்களை தெளிவடையச் செய்வதற்காகவும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையிலான நியாயமான நிவாரணத்தை வழங்குவதோ அல்லது கௌரவமான சுகப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதோ அரசொன்றின் கடப்பாடாகும்.
1983 கறுப்பு ஜுலை கலவரம் துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென பாராளுமன்றம் அறிவிக்க வேண்டும்.
குழுவின் தவிசாளரும் அதன் உறுப்பினர்களும் சபாநாயகரினால் பெயர் குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும்,மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் பன்னிரண்டிற்கு (12) மேற்படாத உறுப்பினர்களை குழு கொண்டிருத்தல் வேண்டும்.
விரிவானதோர் ஆய்வினை மேற்கொள்வதற்காக குழுவினால் அவசியமானது எனத் தீர்மானிக்கப்படும் விதத்தில் எவரேனும் ஆளை, குழுவின் முன் தோன்றுமாறு அழைப்பதற்கும், ஏதேனும் ஆவணத்தை அல்லது பதிவை சமர்ப்பிக்குமாறு எவரேனுமொருவருக்கு பணிப்பு விடுப்பதற்கும், அத்தகைய அனைத்து சாட்சிகளையும் எழுத்துமூலமாக அல்லது வாய்மொழிமூலமாக பெற்றுக்கொள்வதற்கும், குழுவுக்கு உதவி வழங்குவதற்காக தொடர்புடைய துறைகளில் சிறப்பறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், மற்றும்
காலத்துக்குக் காலம் இடைக்கால அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கும், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டாலோ தடைபெறாது கூடுவதற்கும், முழுமையான அதிகாரமளிக்க வேண்டும்.
குழு அதன் முதலாவது அமர்வுத் திகதியிலிருந்து ஆறு (06) மாத காலத்திற்குள் அல்லது பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் அத்தகைய மேலதிக காலப்பகுதிக்குள் அதன் அறிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.












