
இலங்கையின் ஏற்றுமதித் துறையை மேலும் வலுப்படுத்தி, குறிப்பாக மீன்பிடித் துறையின் ஊடாக நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (03) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டின் ஏற்றுமதித் துறையின் முன்னேற்றங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், ஏற்றுமதித் துறையை முன்னேற்றுவதிலும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்றுமதித் துறை என்பது நாட்டின் பொருளாதார எதிர்காலத்தையும், 2 கோடியே 20 இலட்சம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான துறையாகும்.
அந்த வகையில், மீன்பிடித் துறையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும், கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதன் பிரதிபலனாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மீன் ஏற்றுமதியின் ஊடாக நாட்டிற்கு 6,888.9 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 285 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட மீன் ஏற்றுமதி வருமானம் தற்போது 315 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை 2030ஆம் ஆண்டளவில் 600 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.
மீன்பிடித் துறையில் காணப்படும் வளங்களை முறையாகப் பயன்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், ஏற்றுமதிச் சந்தைகளை விரிவுபடுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், கடற்றொழிலாளர் குடும்பங்களின் வருமான உயர்வுக்கும் பங்களிப்பு வழங்க முடியும்.
மேலும், நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்களை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், கடந்த காலங்களில் நிலவிய ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களினால் நாடு எதிர்கொண்ட பாதிப்புகளையும் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த கால தவறுகளிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளையும் சாதகமான பாதையில் கொண்டு செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதேவேளை, மட்டக்களப்பு மயிலத்தமடு பிரச்சினை தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களான மகாவலி அதிகாரசபை, காணி மற்றும் வனத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, அமைச்சர் லால் காந்த தலைமையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு தீர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால், மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, சில அரசியல் தரப்பினர் இவ்வாறான பிரச்சினைகளைப் பயன்படுத்தி இனவாத மற்றும் மதவாத உணர்வுகளைத் தூண்டி அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், சிறிய பிரச்சினைகளைக்கூட அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணை இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரானதாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் சம உரிமையுடனும் ஒற்றுமையுடனும் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்குவதைத் தடுப்பதற்கும் அரசாங்கம் உறுதியுடன் செயற்படும்.
எனவே, எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் இனவாத அரசியல் பிரசாரங்களுக்கும், மதவாதத்தைத் தூண்டும் முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஏமாறாமல், நாட்டின் ஒற்றுமையையும் பொருளாதார முன்னேற்றத்தையும் பாதுகாப்பதில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.












