
தித்வா புயல் அனர்த்தத்தினால் சேதமடைந்த வீதிகளின் உட்கட்டமைப்புகளைப் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை, குறைந்தபட்ச விலைமனுக்களைச் சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் முக்கிய வீதிகளை மறுசீரமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளைப் புனரமைப்பதற்காகத் தேசிய போட்டி விலைமுறி கோரல் முறைமை பின்பற்றப்பட்டு விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன.
கிடைக்கப்பெற்ற விலைமனுக்களை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில், தகுதியான குறைந்தபட்ச விலைமனுதாரர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது:
அதற்கமைய கம்பளை – நாவலப்பிட்டி, உலபன – புஸ்ஸல்லாவ மற்றும் அட்டபாகே – உலபன வீதிகளைப் புனரமைத்து மேம்படுத்தும் 852.83 மில்லியன் ரூபா பெறுமதியிலான ஒப்பந்தம் M/s ELS Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
வத்தேகம – கந்தேநுவர – வாரியபொல வீதி, 16.77 கிலோமீற்றர் வீதியைப் புனரமைத்தல், வடிகாலமைப்பு மற்றும் தடுப்புச்சுவர் நிர்மாணித்தல் அடங்கிய 1516.08 மில்லியன் ரூபா பெறுமதியிலான ஒப்பந்தம் M/s Jayasinghe Contractors (Pvt) Ltd டுவன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டை – மடவல – பம்பரல்ல வீதி மற்றும் வத்தேகம – கந்தேநுவர – வாரியபொல வீதியின் குறிப்பிட்ட பகுதிகள், சேதமடைந்த மற்றும் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை மறுசீரமைக்கும் 965.37 மில்லியன் ரூபா பெறுமதியிலான ஒப்பந்தம் M/s RR Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.












