
2010 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாட்டில் புதிதாக அடையாளம் காணப்படும் நுரையீரல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக வெலிசறை தேசிய சுவாச நோய் வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சை வைத்திய நிபுணர் சமன் இத்தமல்கொட தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று புதன்கிழமை (04) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய புற்றுநோய் நிகழ்ச்சித் திட்டத் தரவுகள் மற்றும் வெலிசறை வைத்தியசாலைத் தரவுகளைக் கொண்டு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், 2010 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாட்டில் புதிதாக அடையாளம் காணப்படும் நுரையீரல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமை தெரியந்துள்ளது. ஆண், பெண் இருபாலாரிடமும் நோய்த்தொற்று அதிகரித்துள்ளதுடன், நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதும் 50 வீதமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, நாட்டில் அடையாளம் காணப்படும் புற்றுநோயாளர்கள் நோய் நிலைமையின் நாட்பட்ட நிலையிலேயே அடையாளம் காணப்படுகின்றனர். அதாவது, நோய் நிலைமையின் 3 மற்றும் 4 ஆவது கட்டத்திலேயே வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளைத் தொடர்ச்சியாகப் பெறுவதன் மூலம் நோய் நிலைமையை முழுமையாகக் குணப்படுத்திக்கொள்ள முடியும். புகைப்பிடிக்கும் பழக்கமுடையோர் மற்றும் புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படக்கூடும்.
ஆரம்பத்தில் 50 – 75 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே நுறையீரல் புற்றுநோய் அடையாளம் காணப்பட்ட போதிலும், தற்போது 40 – 70 வயதுக்கு இடைப்பட்டவர்களும் இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில், சமீபகாலமாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களும் நுரையீரல் நோயால் பாதிப்புக்குள்ளாகுவதும் அதிகரித்துள்ளது. வெலிசறை தேசிய சுவாசநோய் வைத்தியசாலையில் புதன்கிழமைகளில் நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.
ஆகையால், சமீபகாலமாகவோ அல்லது நீண்டநாட்களாகவோ புகைப்பிடிக்கும் பழக்கமுடைய மற்றும் 50 – 75 வயதுக்கு இடைப்பட்ட நபர்களுக்கு இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், புகையைச் சுவாசிக்கக்கூடிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மற்றும் இந்நோயால் பாதிப்புக்குள்ளாகியவர்களின் இரத்த உறவினர்களுக்கும் வயது வேறுபாடின்றி நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதுக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும். இலங்கையில் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் நுரையீரல் புற்றுநோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றனர் என்றார்.












