இலங்கையில் வரலாறு காணாத நெல் அறுவடை – 54 இலட்சம் மெற்றிக் தொன் பதிவு!



வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இவ்வாண்டு ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபா என்ற விலையில் அதிகளவான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் நெல் கொள்வனவுக்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (04) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (பட்டுப்பாட்டு) சட்டத்தின்கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிப்பு மற்றும் 2026ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தற்போது அரசாங்கத்திடம் 212,000 மெற்றிக் தொன் நெல்லும் தனியார் துறையிடம் 49,000 மெற்றிக் தொன் நெல்லும் கையிருப்பில் உள்ளதுடன் இவை அனைத்தும் கிலோ 120 ரூபா என்ற விலையில் கொள்வனவு செய்யப்பட்டவை. இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் கூற்று உண்மைக்குப் புறம்பானவை. விவசாயிகளிடமிருந்து அதிகூடிய விலைக்கு அதிகளவான நெல்லைக் கொள்வனவு செய்துள்ளதுடன், நாட்டின் வரலாற்றில் அதிகூடிய 5.4 மில்லியன் மெற்றிக் தொன் நெல் இவ்வாண்டு அறுவடையாகக் கிடைத்துள்ளது.

2025ஆம் ஆண்டு 5.1 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்திருந்தது. எனினும் 2026ஆம் ஆண்டு சிறுபோகத்தில் 2.12 மில்லியன் மெற்றிக் தொன்னும், பெரும்போகத்தில் 3.3 மில்லியன் மெற்றிக் தொன்னுமாக மொத்தம் 5.4 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது. இது நாட்டின் வரலாற்றில் பதிவான அதிகூடிய நெல் அறுவடையாகும்.

இந்த நெல்லை அரிசியாக மாற்றும்போது சுமார் 3.5 மில்லியன் மெற்றிக் தொன் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, வெள்ளை மற்றும் சிவப்பு நாடு அரிசி வகைகள் அதிகளவில் கையிருப்பில் உள்ளன.

இவ்வாண்டு நெல் கொள்வனவில் உரிய விதிமுறைகளை மீறிய 36 பேர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அரிசி இறக்குமதி தொடர்பில் சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

சுற்றுலாத்துறையின் தேவைகளுக்காக விசேட அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளரின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர், குறித்த அரிசி வகைகளுக்கான இறக்குமதி வரி 68 ரூபாவிலிருந்து 280 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரிசி இறக்குமதியை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான நடைமுறைகளையும் பின்பற்றுவதற்கு உணவுப் பாதுகாப்புக் குழு தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதுடன், நாளொன்றுக்கு 5,000 கிலோகிராம் நெல்லை உலர்த்தக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.