அஸ்வெசும பயனாளிகளுக்கு ரூ.6,250 வரை மேலதிக நிவாரணம் – ரூ.4,700 கோடி ஒதுக்கீடு!



எரிபொருள் விலை உயர்வில் இருந்து மக்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கும், 'அஸ்வெசும' பயனாளிகளுக்கு மேலதிக நிவாரணம் வழங்குவதற்கும் 47 பில்லியன் ரூபாய்க்கான மேலதிக ஒதுக்கீடு இன்று (04) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், குறித்த தொகையில் 41 பில்லியன் ரூபாய் வலுசக்தி அமைச்சின் செலவினத்திலும், 6 பில்லியன் ரூபாய் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் 'அஸ்வெசும' திட்டத்திற்காகவும் ஒதுக்கிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலையில் ஏற்பட்ட தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தைப் நுகர்வோருக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்காக, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் இந்த 41 பில்லியன் ரூபாய் தொகை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

'அஸ்வெசும' திட்டத்தின் கீழ், மிக வறுமை பிரிவினருக்கு 6,250 ரூபாயும், வறுமை பிரிவினருக்கு 4,000 ரூபாயும் மேலதிகக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மிக வறுமை பிரிவினருக்கான கொடுப்பனவு இரண்டு தவணைகளில் செலுத்தப்படும் என்பதுடன், இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் கொடுப்பனவாகும்.

இந்த மேலதிக மதிப்பீட்டிற்காக எந்தவொரு மேலதிகச் செலவும் ஏற்படாது என்றும், தற்போது ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை ஏனைய துறைகளில் இருந்து முறைமைப்படுத்தித் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.