ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலத்தை 72 மணித்தியாலத்திலிருந்து 48 மணித்தியாலமாகக் குறைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடே ஒன்றாக தேசிய இயக்கத்தின் ஆன்மிக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடையாளம் காண்பதற்காக ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் 'பச்சைக் குத்துதல்' முறையானது எமது நாட்டிற்குத் தேவையில்லை என்றால், அந்த ஏற்பாட்டைச் சட்டத்திலிருந்து நீக்கிக் கொள்ளவும் தாம் தயார் என அவர் இங்கு தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தாங்கள் உள்ளிட்ட தரப்பினர் நீண்டகாலமாக எதிர்த்ததுடன், அந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுபவர்கள் என்ற ரீதியில், அத்தகைய சட்டத்தை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்குச் சட்டம் ஒன்று அவசியமாகையால், அதற்காக புதிய சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த சட்டமூலம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் யோசனைகள் குறித்து மனித உரிமைகள் தொடர்பில் விவாதிக்கும் தரப்பினருடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், மக்களை அடக்குவதற்கோ அல்லது அவர்களின் உரிமைகளை மீறுவதற்கோ அரசாங்கத்திற்கு எந்தத் தேவையும் இல்லை எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத்தான் நாங்கள் நீண்ட காலமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காகப் பயன்படுத்தி வந்தோம்.
தனிப்பட்ட முறையில் பார்த்தால், நாங்கள் நீண்ட காலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தவர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் அடி வாங்கியவர்கள். அதனால் அத்தகைய சட்டம் தேவையில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
எங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டம் அவசியமாகும். இப்போது நாங்கள் அந்தச் சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளோம். அதற்கு எதிராக இரண்டு குழுக்கள் உள்ளன.
ஒன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சலுகைகளையும் பாதுகாப்பையும் பெறுபவர்கள். அந்தக் குழுக்களை நாம் கணக்கிலெடுப்பதில்லை.
மற்றொரு குழுவினர் எமது நாட்டின் மனித உரிமைகள் குறித்துப் பேசுபவர்கள். நாங்கள் அந்தக் குழுக்களுடனும் கலந்துரையாடத் தயாராக உள்ளோம்.
இதன் மூலம் எவ்வாறாயினும் மக்களை ஒடுக்கும், மக்களின் உரிமைகளை மீறும் நோக்கம் எங்களிடம் இல்லை. எங்களுக்குத் தேவையானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கான ஒரு சட்டமாகும். அந்தச் சட்டத்தை உருவாக்குவதுதான் எமது பணியாகும்.
தற்போது அந்தச் சட்டம் உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அது கலந்துரையாடப்பட்டு வருகிறது. அந்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்றவர்கள் பிரதானமாக மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சட்டத்திற்குள் தடுத்து வைக்கும் காலம் 72 மணித்தியாலங்களாகும். அது அதிகம் என்ற யோசனை உள்ளது. நாங்கள் அதனை 48 மணித்தியாலங்களாகத் திருத்தம் செய்யத் தயாராக உள்ளோம். நாங்கள் செவிமடுக்கத் தயாராக உள்ளோம்.
பச்சைக் குத்துவது குறித்தும் மற்றொரு உரையாடல் உள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை அடையாளம் காணும் முறைமை அது. ஆனால் அது எமது நாட்டில் தேவையில்லை என்றால், அந்தச் சட்டம் எங்களுக்குத் தேவையில்லை. அதையும் நீக்கிக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.













