நவம்பர் 9 முதல் 14 வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் – 74 சுகாதாரப் பிரிவுகளில் விசேட நடவடிக்கை!



நாடளாவிய ரீதியில் பதிவாகிவரும் மழைவீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், சுகாதார அமைச்சின் அறிவித்தலுக்கமைய தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவால் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்த விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் டெங்கு பரவலின் போது நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை, குடம்பியல் ஆய்வு முடிவகள் மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக டெங்கு தொற்று அச்சுறுத்தல் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுளம்பு பரவல் அதிகரிக்கக் கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம், ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ கிளின் ஸ்ரீலங்கா, பொலிஸார், முப்படையினர் மற்றும் ஏனைய தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நவம்பர் 09 முதல் 14 வரை டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பத்தில் நவம்பர் 2 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை முன்னெடுப்பதுக்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.