இன்றைய வானிலை



தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என அந்த திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, மிகப் பலமிக்க "முரசு" சூறாவளியானது வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் இன்று அதிகாலை 02.30 மணியளவில் காணப்பட்டதுடன், இது வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து ஆந்திரப் பிரதேச கரையை இன்று காலை வேளையில் ஊடறுத்துச் செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஆகையினால் மறு அறிவித்தல் வரையில் மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் வங்காள விரிகுடாவின் ஆழ் கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது தென் திசையில் இருந்து காற்று வீசும்.

சிலாபம் தொடக்கம் மன்னார் , காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.