
புலம்பெயர் அமைப்புகளுடன் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொடுக்கல் - வாங்கல்கள் தொடர்பான முழுமையான விபரங்களைப் பகிரங்கப்படுத்தவேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஏன் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை (05) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகப் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தது.
வீதிகளில் இறங்கிப் போராடியதுடன், நீதிமன்றங்களையும் நாடியது. ஆனால், இன்று அதேபோன்றதொரு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கின்றது. மக்களின் நலனுக்காக ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று மக்களுக்கே நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றனர்.
ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 500 ரூபாவையும் தாண்டியுள்ளது. வசதிபடைத்தவர்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பு பாதிப்பாக இருக்காது. ஆனால், அன்றாட வருமானத்தை நம்பி வாழும் ஏழை மக்களால் இந்த விலை அதிகரிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாது. பேருந்துக் கட்டணங்களும் அதிகரிப்பதால் மக்கள் போக்குவரத்துச் சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாகக் கூறியிருந்தார். அந்தக் கொடுக்கல் வாங்கல்கள் என்னவாயின? அவை தொடர்பான விபரங்களை ஏன் அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தவில்லை? அரசாங்கம் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும்.
ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பிலும் பல கேள்விகள் உள்ளன. 159 பேர் கொண்ட பட்டியலில் எத்தனை பேர் வெளியேறப் போகின்றார்கள், எத்தனை பேர் தொடர்ந்து இருக்கப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். குறிப்பிட்ட சிலரைப் பழிவாங்குவதற்காகச் சட்டங்கள் பயன்படுத்தப்படக்கூடாது.
மேலும், அரசாங்கம் வரிகளை அதிகரித்து வருகின்றதே தவிர, ஏழை மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கவில்லை. பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக்கூடக் கொள்வனவு செய்ய முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக ஆட்சியாளர்களின் சுகபோகங்களை உறுதிப்படுத்தாமல், மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க வேண்டும். திறைசேரியில் மீதமாகியுள்ள நிதியை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தி, ஏழை மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












