நாடே திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறியுள்ளது – தயாசிறி ஜயசேகர!


பாதுகாப்பு துறையினருக்கு இருந்த கைது செய்யும் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கும் ஏனைய சில நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை ஒரு வருடம் வரை தடுப்புக்காவலில் வைக்கும் அதிகாரமும் பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்பட்டு நாடே ஒரு வெளிப்படையான சிறைச்சாலையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை முடக்கி, நாட்டை இராணுவமயமாக்கல் நோக்கியும் பொருளாதார நெருக்கடியை நோக்கியும் தள்ளி வருகிறது. குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டமூலங்கள் மூலம் நாடு ஒரு இராணுவ இராச்சியமாக மாற்றப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு துறையினருக்கு இருந்த கைது செய்யும் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கும் ஏனைய சில நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை ஒரு வருடம் வரை தடுப்புக்காவலில் வைக்கும் அதிகாரமும் பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்பட்டு நாடே ஒரு வெளிப்படையான சிறைச்சாலையாக மாறியுள்ளது.

கடந்த காலங்களில் வீதிகளை மறித்துத் தொடர்ச்சியாகப் போராடியவர்களே இன்று மக்களின் போராட்ட உரிமைகளை நசுக்கி வருகின்றனர். சர்வதேச மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் கேள்விகளையும் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. தனியார் துறை விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து அரசாங்கமும் எரிபொருள் விலையை அதிகரித்து வருகிறது.

கோதுமை மா மற்றும் பாண் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் விலையேற்றத்தின் போது வரியைக் குறைக்க வேண்டும் என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு 12 தடவைகளுக்கும் மேலாக வரிகளை அதிகரித்து மக்கள் மீதான சுமையை உயர்த்தியுள்ளனர்.

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடிகள் குறித்து ஆராய விசேட பாராளுமன்றக் குழுவொன்றைக் கோரிய போதிலும் சபாநாயகர் அதற்கு அனுமதியளிக்கவில்லை. எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அரசாங்கத்தின் கைப்பாவையாகச் செயல்படும் சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.