கிழக்கிற்கு போனஸ் ஆசனம் வழங்காதவர்கள் இன்று கிழக்கில் போராடுகின்றனர்! – கந்தசாமி பிரபு




2020 பொதுத்தேர்தலின் போது போனஸ் ஆசனத்தைக் கூட கிழக்கு மாகாணத்திற்கு வழங்காதவர்கள் தற்போது கிழக்கு மாகாணத்திற்கு வந்து போராடுகின்றனர். மயிலத்தமடு, மாதவனை பிரச்சினையில் கடந்த காலங்களில் எந்தவித நிபந்தனைகளையும் இன்றி நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள் எங்கே போயிருந்தனர்? எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருந்த போது, மாகாண சபையில் அமைச்சர்களாக இருந்த போது ஏன் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. அரசியல்நோக்கத்துக்காக இன்று போராடுகிறார்கள். மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு பெற்றுக்கொடுப்போம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாதவனை தொடர்பான பிரச்சினை தற்போது பூதாகரமான பிரச்சினையாக எழுப்பப்படுகின்றது. இந்த பிரதேசத்தில் நீண்ட காலமாக மேய்ச்சல் தரைகளை பயன்படுத்தி பண்ணையாளர்கள் தமது பசுக்கள் மற்றும் மாடுகளை கட்டிக்கொண்டு அவர்கள் தமது வாழ்வாதாரத்தில் ஈடுபடுகின்றனர். இங்கு நிலவும் பிரச்சினை நீண்ட காலமாக நிலவும் பிரச்சினை . நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் வீதியோரத்தில் நீண்ட காலமாக போராடிக்கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு ஜனாதிபதி வந்திருந்த போது இந்த பிரதேசத்தில் மேய்ச்சல் தரையை விடுவிக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார் . கடந்த காலங்களில் எந்தவித நிபந்தனைகளையும் இன்றி நல்லாட்சி ஆதரவு வழங்கியவர்கள் எங்கே போயிருந்தனர்?. எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருந்த போது, மாகாண சபையில் அமைச்சர்களாக இருந்த போது ஏன் இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவில்லை?. ஏன் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை?

2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சைக்கிள் கட்சிக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தை கிழக்கு மாகாணத்திற்கு வழங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் போது அந்தக் கட்சியினர் கிழக்கு மாகாணத்திற்கு வந்து போராடுகின்றனர். வடக்கில் தேவையான போது கிழக்கில் இருந்து மக்களை கொண்டு ஆர்ப்பாட்டத்தை ஈடுபடுவதும், கிழக்கில் உங்களின் அரசியல் நாடகத்திற்காக அங்கு போராட்டம் நடத்துகின்றனர். தமிழ்த் தேசியக் கட்சிகள் போலித் தேசிய வாதத்தை முன்னெடுக்கின்றனரே தவிர மக்களின் நலனை நோக்காக்க கொண்டு அவர்கள் செயற்படவில்லை என்றே தெரிகின்றது. இதனை நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டு அரசியல் நாடகத்தை நிறுத்த வேண்டும்.

அத்துடன் அரசாங்க அதிபர் மீது தவறான அபிப்பிராயத்தை குறிப்பிட்டுள்ளனர். அவருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் பண்ணையாளர்களை விட கட்சி சார்ந்தவர்களே இருந்தனர். பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்களே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதில் பண்ணையாளர்கள் பங்கேற்கவில்லை. அந்த முகங்களை பார்க்கும் போது பண்ணையாளர்களா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இவ்வாறான போலியான அரசியல் நாடகங்களை நிறுத்துமாறு கோருகின்றோம்.

அரசாங்க அதிபர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். 7 பேர் வரவுள்ளதாக கூறப்பட்ட போதும் 5 பேர் மட்டுமே கலந்துகொண்டதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் கலந்துகொள்ளத் தயாராக இருக்கவில்லையெனவும், ஊடகவியலாளர்களுடன் வந்தே சந்திப்போம் என்று குறிப்பிட்டதால் இவர்களாகவே வெளியேறினர். இவர்கள் அரசாங்க அதிபர் தொடர்பில் தவறாக சுட்டிக்காட்டி பிழையான தகவலை வழங்கியுள்ளனர். இந்த அரசியல் நாடகத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.