
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதைத் தடுத்து, சூரிய சக்தித் துறையை திட்டமிட்டு முடக்கும் வகையில் எரிசக்தித் துறையிலுள்ள ஊழல் அதிகாரிகள் மற்றும் மாபியாக்கள் செயற்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டி, ஐக்கிய நாடுகள் சபையிடம் கடிதம் ஒன்று எரிசக்தி துறைசார்ந்த தொழிற்சங்கங்களால் கையளிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் பிரதிநிதி ஒருவர்,
நிலையான அபிவிருத்தி இலக்குகளின் கீழ் 70 சதவீதமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு என்ற இலக்கை எட்டுவதற்கும், 2050 ஆம் ஆண்டளவில் பூச்சியக் கரிம உமிழ்வு நிலையை அடைவதற்கும் சர்வதேச ரீதியாக இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது.
எனினும், எரிசக்தித் துறையில் நிலவும் ஊழல் அதிகாரிகளின் மாபியா செயற்பாடுகள் காரணமாகவே இந்த இலக்குகளை நோக்கி நகர்வதில் பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கூரை மீதான சூரிய சக்தித் தொழிற்துறை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது.
குறிப்பாக, கூரைகளில் பொருத்தப்படும் சூரிய சக்தி முறைமைகள் மீது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழல் அதிகாரிகள் கடும் அதிருப்தியைக் கொண்டுள்ளனர். ஏனெனில் டீசல் மற்றும் நிலக்கரி கொள்வனவுகள் ஊடாக அவர்களுக்குக் கிடைக்கும் தரகுப் பணம் இல்லாமல் போவதே இதற்கான பிரதான காரணமாகும்.
மாறாக, அதிகளவில் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு சில முன்னணி நிறுவனங்களுக்கு மாத்திரம் தரையில் நிறுவப்படும் சூரிய சக்தி திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊழல் அதிகாரிகளின் தவறான வழிகாட்டல்களினால் அரசாங்கம் தவறாக வழிநடத்தப்பட்டு, இந்த ஒட்டுமொத்தப் புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடைக்கான பிரதான காரணம் தரம் குறைந்த நிலக்கரி மற்றும் அதன் தொழில்நுட்பக் கோளாறுகளே என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு பெருந்தொகை நிதியைச் செலுத்தி டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், மின்சாரத்தைப் பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் அவற்றுக்கான பாரிய கட்டணங்கள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான மின்தடைகள் ஏற்படுவது நாட்டின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும் பாரிய பிரச்சினையாகும்.
இந்த ஊழல் அதிகாரிகளின் முறைகேடுகள் காரணமாகவே மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க முடியாமலும், கூரை மீதான சூரிய சக்தி அமைப்புகளை விரிவுபடுத்த முடியாமலும் போயுள்ளது.
மேலும், நிகரக் கணக்கியல் (Net Accounting) மற்றும் நிகர மின் அளவீடு (Net Metering) செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதன் பின்னர், 5 கிலோவோல்ட் சூரிய சக்தி அமைப்பினூடாக உற்பத்தியாகும் 500 அலகுகளுக்கு அரசாங்கம் நுகர்வோருக்கு சுமார் 14,500 ரூபா மாத்திரமே வழங்குகிறது. ஆனால் அதே 500 அலகுகள் மின்சாரத்தை இலங்கை மின்சார சபையிடமிருந்து நுகர்வோர் பெற்றுக்கொள்ளும்போது சுமார் 47,900 ரூபா வரை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையை மாற்றி அமைத்து, நிலக்கரி மற்றும் டீசல் மாபியாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் வகையிலும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












