ஆட்சியைக் கைப்பற்ற பௌத்த அடையாளங்களைப் பயன்படுத்தியது அரசாங்கம் – சுமங்கல தேரர் குற்றச்சாட்டு!



ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆளுங்கட்சியினர் பௌத்த அடையாளங்களையும் சாசனத்தின் சலுகைகளையும் பயன்படுத்திக்கொண்டதாகவும், தற்போது தங்களைப் பௌத்தர்களாக முன்னிறுத்த முயற்சிப்பதாகவும் உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரர் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் சுனில் செனவி தற்போது நாடு முழுவதும் தாம் பௌத்தர் என்று கூறிக்கொள்கின்றார். அவரது கூற்றைக் கேட்கும்போது, கவலையையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது.

முன்றாம் பாலின சமூகத்தை உருவாக்குவது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசியது யார் என்பது அமைச்சருக்கு நினைவிருக்கிறதா? அப்போது மதச்சார்பற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு இப்போது அறநெறிப் பாடசாலையும் குடும்ப உறவுகளும் பௌத்த சாசனத் தொடர்புகளும் நினைவுக்கு வந்துள்ளன.

அமைச்சர் பதவியேற்ற ஆரம்பத்தில் பௌத்த சாசன அமைச்சு என்ற ஒன்று தற்போது இல்லை என ஊடகங்களிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அவற்றை அவர் மீண்டும் வாசிக்கவேண்டும்.

அறிவுசார் சொத்துரிமையைத் திருடியதாகவும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையாடல் தொடரைத் தனது பெயரில் வெளியிட்டதாகவும் சுனில் செனவி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் தகவல்களைப் பார்த்தேன். எனினும், அது தொடர்பான நீதிமன்ற அறிக்கைகளை நான் பார்க்கவில்லை. எனவே, அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ஒருவரின் தாய், தந்தை, பாட்டன், பூட்டன் எனப் பரம்பரையே பௌத்தர்களாக இருந்தாலும் அதனால் அவர் பௌத்தராகிவிட முடியாது. பௌத்தர் என்ற பெயரை விட பௌத்தத் தன்மையே முக்கியம். அமைச்சரின் தந்தையின் சகோதரர் பிக்கு, தம்பி பிக்கு என உறவுமுறைகளைப் பட்டியலிடுவதால் பௌத்தத் தன்மை நிரூபிக்கப்படாது. புத்தபெருமானுடன் மட்டுமே அவருக்கு உறவுமுறை இல்லாதது போல் மற்ற அனைவருடனும் உறவுகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இது வெட்கக்கேடானது.

அமைச்சர் தனது கடந்தகாலக் கருத்துகள், அரசியல் நடவடிக்கைகள், எழுதிய நூல்கள் ஆகியவற்றை மீண்டும் ஆராய வேண்டும். யாரைச் சுயநலவாதி என எழுதியது, எந்தக் கருத்தை முன்வைத்தது என்பதையும் விளக்கவேண்டும். தற்போது வெளியிடும் நூல்களை அவரே எழுதினாரா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். சாசனத்துடன் உறவுமுறை இருப்பதால் மட்டும் ஒருவர் பௌத்தராக முடியாது. புத்தபெருமானின் உறவினரான தேவதத்தனே அவருக்கு எதிராகச் செயற்பட்டார். அந்த அடிப்படையில்தான் சுனில் செனவியின் நடவடிக்கைகளைப் பார்க்கின்றோம்.

திசைகாட்டி அரசாங்கத்தினர் தாங்கள் பௌத்தர்கள் என்பதை நிரூபிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு முன்னர் எந்த அரச தலைவரும் தாம் பௌத்தர் என இவ்வாறு அறிவித்ததில்லை. அவர்களது செயற்பாடுகளின் அடிப்படையிலேயே மக்கள் அவர்களின் பௌத்த பற்றை மதிப்பிட்டனர். அண்மைக்காலத்தில் பௌத்த சாசனத்துக்கு எதிராக செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் அரச தலைவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவே.

அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாடுகளுக்கு எதிராக பிக்குகள் பெருமளவில் அணி திரண்டனர். கண்டியிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை முன்னெடுக்கப்பட்ட உறுதிப்பாட்டுப் பாதயாத்திரைக்கு எந்தப் பிக்குவையும் அமைப்பு ரீதியாக அழைக்கவில்லை. எந்த விகாரைக்கும் சென்று அழைப்பும் விடுக்கவில்லை. பிக்குகள் தாமாகவே விரும்பி வந்தனர். அரச அனுசரணையுடன் சாசனத்தை அழிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டம் இருப்பதாக அவர்கள் உணர்ந்ததாலேயே மழையையும் பொருட்படுத்தாமல் வீதியில் இறங்கினர்.

அரசாங்கத்தின் மதச்சார்பற்ற கொள்கை எதிர்பார்த்ததை விட விரைவாக வெளிப்பட்டுள்ளது. ஆளும் தரப்பினர் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காகப் பௌத்த அடையாளம், காவி உடை, விகாரைகள், மத நிறுவனங்கள், சாசனத்தின் சலுகைகள், புத்தபூசை ஆகியவற்றைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், இப்போது பௌத்தர்களாக முன்னிறுத்திக்கொள்கின்றனர்.

சிறந்த உபாசகர்களாகத் தங்களை காட்ட முயல்கின்றனர். ஆனால், உபாசகர் வேடத்துக்குப் பின்னால் தந்திரமான நரி இருப்பதை மகா சங்கத்தினரும் பெரும்பான்மையான பௌத்த மக்களும் ஏனைய மதத்தினரும் புரிந்துகொண்டுள்ளனர். இதனை அரசாங்கம் உணரவேண்டும் என்றார். இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர் என்றார்.