திருகோணமலையில் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி; இருவர் படுகாயம்!



திருகோணமலை கப்பல்துறை சந்திக்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (2) இரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கப்பல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, பேக்கரி வீதி, பெதிஸ்புர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சிறி நாராயண ரத்ன விபூஷண குலதுங்க ஆராச்சிகே கயான் மதுசங்க சோமரத்ன என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று இரவு குறித்த பகுதியில் பச்சை நிற முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துக்கொண்டிருந்தபோது, அவர்களை இலக்கு வைத்து இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மதுசங்க சோமரத்ன சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், திருகோணமலை ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சரித் அசங்க மற்றும் அபயபுர, லெனின் மாவத்தையைச் சேர்ந்த 28 வயதுடைய ஃபிரடெரிக் தர்ஷா டெவெண்டா (டாரல்) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.