
நிதித் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியானது இலங்கையின் நிதிக் கட்டமைப்புக்கும் நுகர்வோருக்கும் இணையவழித் தாக்குதல்கள், நிதி மோசடிகள் மற்றும் தனிப்பட்ட தரவுக் கசிவுகள் உள்ளிட்ட புதிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற இலங்கை நிதித் தொழில்நுட்ப விழாவில் (Sri Lanka FinTech Festival) உரையாற்றிய அவர், நிதித்துறையில் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதுடன், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் நிதி உறுதிப்பாட்டைப் பேணுவதற்கும் வலுவான ஒழுங்குமுறைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
இணையவழித் தாக்குதல்கள், செயல்பாட்டுத் தடங்கல்கள், நிதி மோசடிகள், தரவுக் கசிவுகள், நுகர்வோருக்கு போதிய தகவல்களை வெளிப்படுத்தாமை மற்றும் அளவுக்கு அதிகமான கடன் சுமை உள்ளிட்டவற்றை நிதித் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கிய ஆபத்துக்களாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், முக்கியமான நிதிச் சேவைகள் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே அதிகளவில் குவிந்து வருவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். இத்தகைய நிலைமை நிதிக் கட்டமைப்பில் மேலதிக பாதிப்புகளையும் பலவீனங்களையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்தார்.
நாடுகளுக்கு இடையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஒழுங்குமுறை மேற்பார்வையைச் சிக்கலாக்கக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், சில டிஜிட்டல் சொத்துக்களின் விலை மாற்றங்கள் நுகர்வோருக்குப் பாரிய நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், சட்டவிரோத நிதிச் செயற்பாடுகளுக்கும் வழிவகுக்கலாம் எனத் தெரிவித்தார்.
இலங்கை தொழில்நுட்பப் புத்தாக்கங்களைத் தொடர்ந்து உள்வாங்கினாலும், நாட்டின் நிதி உறுதிப்பாட்டில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது எனக் கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்தினார்.
போட்டி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதுடன், பயனுள்ள மேற்பார்வை, முறையான இடர் முகாமைத்துவம் மற்றும் வலுவான நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையில் சரியான சமநிலையைப் பேணுவதே தற்போதைய சவாலாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் கொடுப்பனவுகள், கையடக்கத் தொலைபேசி வங்கிச் சேவைகள், இணைய வங்கிச் சேவைகள் உள்ளிட்ட நிதித் தொழில்நுட்பங்கள் ஏற்கனவே இலங்கையில் தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், டிஜிட்டல் அடையாளக் கட்டமைப்புகள், தரவு அடிப்படையிலான கடன் வழங்கல், நாடுகளுக்கு இடையிலான கொடுப்பனவு இணைப்புகள் மற்றும் டிஜிட்டல் முதலீட்டுச் சேவைகள் போன்றவற்றின் எதிர்கால வளர்ச்சி இலங்கையின் நிதித்துறைக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், பொறுப்பான நிதிப் புத்தாக்கங்களுக்கு ஆதரவளிப்பதில் மத்திய வங்கியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், மத்திய வங்கியின் நிதித் தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சோதனைக் களமான (FinTech Regulatory Sandbox) ஊடாகத் தகுதியான புத்தாக்க நிதித் தீர்வுகளை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் பரிசோதிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பொதுமக்களின் நம்பிக்கை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் நிதிக் கட்டமைப்பின் உறுதிப்பாடு ஆகியவற்றைப் பேணும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.












