
கிறிஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் விசாரணைகளை மூடிமறைக்கும் வகையில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதானியுமான ரவி வைத்தியாலங்கார செயற்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி, இலஞ்சம், ஊழல், மோசடிகளுக்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (02) முறைப்பாட்டைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கிறிஸ் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும், அந்நிறுவனத்தின் முன்னாள் பெண் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. அப்போது நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பிரதானியாக இருந்த ரவி வைத்தியாலங்கார விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும் ஆரம்பித்திருந்தார்.
எனினும், 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி கிறிஸ் டிரான்ஸ்வேர்க்ஸ் குளோபல் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டு அவர் தனது கையொப்பத்துடன் கடிதமொன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தக் கடிதத்தின் பின்னணி என்ன? குறித்த கொடுக்கல் வாங்கலில் ஊழல், மோசடிகள் இடம்பெறவில்லை என அவர் எதன் அடிப்படையில் தீர்மானித்தார்? நாமல் ராஜபக்ஷ தரப்பினரிடமிருந்து இலஞ்சம் அல்லது சலுகைகளைப் பெற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே இந்தக் கடிதம் வெளியிடப்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும்.
மேலும், அரச பதவியிலிருந்து விலகிய பின்னர் ரவி வைத்தியாலங்கார கிறிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியொன்றை வகித்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. இதன் பின்னணி மற்றும் நிறுவனத்துடனான அவரது தொடர்புகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும்.
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான தற்போதைய விசாரணைகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திலானவையா என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே, இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டும்.
ரவி வைத்தியாலங்காரவுக்கு எதிராக ஏற்கனவே இரண்டு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது மூன்றாவது முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளோம். குறித்த கடிதம் வெளியிடப்பட்டமை மற்றும் முன்னைய விசாரணைகள் கைவிடப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அவர் தவறு செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷவாக இருந்தாலும் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்துமாறு ஆணைக்குழுவைக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.












