சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயகத்தின் மீதான பாரிய தாக்குதல் – சஜித் குற்றச்சாட்டு!



சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதை சபாநாயகரே நிராகரித்துள்ளமையானது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் செயலாகும். இது நாட்டின் ஜனநாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பாரதூரமான தாக்குதலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை (03) விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

பாராளுமன்றத்தின் உன்னத தன்மை, ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் சபாநாயகரின் நடுநிலைத்தன்மை தொடர்பான அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற மரபுகள் மீறப்பட்டமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளோம். இருப்பினும், தற்போதைய சூழலில் இந்த சிறப்புரிமைப் பிரச்சினையைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு கூட எதிர்க்கட்சிக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.

தற்போது பாராளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் பேசுவதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்கும் உள்ள சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 3 ஆம் உறுப்புரிமைக்கமைய இறைமை மக்களிடமே உள்ளது. அரசியலமைப்பின் 74 ஆம் உறுப்புரிமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள நிலையியற் கட்டளைகள் என்பவை பாராமன்றத்தின் கூட்டு அதிகாரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் சட்டக் கட்டமைப்பாகும். ஆனால், பாராளுமன்றத்தை ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு ஏற்ப இயங்கும் ஸ்தாபனமாக மாற்ற முற்படுகின்றனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் மரபின் படி, சபாநாயகர் பதவி என்பது ஆளுங்கட்சியின் அல்லது எதிர்க்கட்சியின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றும் பதவியல்ல. மாறாக, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருசாராருக்கும் சமமான வாய்ப்பை வழங்கி, பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்புச் சார்ந்த கடமையாகும். பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காகச் சிறுபான்மை மற்றும் எதிர்க்கட்சியினரின் குரலை நசுக்குவது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கே எதிரானது.

சபாநாயகருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி, 44 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கடந்த ஒக்டோபர் 09 அன்று பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டது. ஒக்டோபர் 12ஆம் திகதி அன்று இது ஒழுங்குப் பத்திரத்திலும் சேர்க்கப்பட்டது. எனினும், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானம் எனக் கூறி, சபாநாயகர் மீதான பிரேரணையை விவாதத்திற்கு எடுக்காமல் சபாநாயகரே நிராகரித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க வாய்ப்பளிக்காமல் மறுப்பது சபாநாயகர் பதவியின் நடுநிலைமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், பாராளுமன்ற சிறப்புரிமைகளையும் மீறியுள்ளது.

தன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பது குறித்து சபாநாயகரே தீர்மானிப்பது சட்டத்தின் ஆட்சிக்கும் நீதிக்கும் ஏற்பட்ட களங்கமாகும். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயக எல்லைகள் அடைக்கப்படுகின்றன. நாடு ஒரு ஒற்றைக் கட்சி ஆட்சிக்கும், சர்வாதிகார பொலிஸ் இராச்சியத்துக்கும் வழிநடத்தப்படுகிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.