முடிந்தால் எரிபொருள் விலைச் சூத்திரத்தை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கிறேன் - டீ.வி.சானக்க


அரசாங்கத்தினால் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 150 ரூபாவும் டீசலுக்கு 126 ரூபாவும் வரியாக அறவிடுகிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை பெற்றோல் விலை 36 வீதத்தினாலும் டீசல் விலை 40.3 வீதத்தினாலும் மண்ணெண்ணெய் விலை 55 வீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் எரிபொருள் விலைச் சூத்திரத்தை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கிறேன் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டீ.வி.சானக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்கம் இப்போது வெளிப்படைத் தன்மை தொடர்பில் பேசுகிறது. ஆனால் காஞ்சன விஜேசேகர வலுசக்தி அமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்படும்போது விலைச் சூத்திரம் ஊடகங்களுக்கு வெளியிடப்படும்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை வெளியிடுவதில்லை. விலைச் சூத்திரம் ஊடகங்களுக்கு வெளியிடப்படும்போது துறைமுகத்தில் இறக்கிய எரிபொருளின் விலை, அதற்கான வரி எவ்வளவு, அதில் எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு இருக்கும் இலாபம் எவ்வளவு போன்ற விடயங்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

ஆனால் அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து விலைச்சூத்திரத்தை வெளிப்படுத்தவில்லை. முடிந்தால் இந்த மாதத்தில் இருந்து விலை சூத்திரத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். அப்போது மக்களுக்கு அதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள முடியும். இதனை செய்யாமல் மறைப்பது ஏன்?

எவ்வாறாயினும் கிடைத்த தகவல்களுக்கமைய பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு 150 ரூபா வரி உள்ளது. அதேபோன்று டீசலுக்கு 126 ரூபா வரி உள்ளது. விலைச்சூத்திரம் கூறாமையினால் இதனை தெரிந்துகொள்ள முடியவில்லை. இறக்கும் விலையை விடவும் குறைந்த விலைக்கே விற்பனை செய்வதாக சம்பந்தப்பட்ட அமைச்சர் கூறுகின்றார்.

ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல் 113 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 36 வீத அதிகரிப்பாகும். டீசல் 114 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதன் விலை 40.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதேபோன்று மண்ணெண்ணெய் 102 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இது 55 வீத அதிகரிப்பாகும். ஒருபக்கம் எரிபொருள் விலை அதிகரிக்கையில் மறுபக்கத்தில் வரிகள் அதிகரிக்கப்படுகின்றன. ஆனால் மக்களின் பொருளாதாரமும் சம்பளமும் அதிகரிக்கவில்லை என்றார்.