.jpg)
பொய் கூறுவதில் ஜனாதிபதி சிறந்தவர். 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பொய்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். முன்மொழியும் பொய்கள் என்னவாக இருக்கும் என்பதை எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (4) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கப்பலில் இருந்து இறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குவோம் என்று ஜனாதிபதி ஆரம்பத்தில் குறிப்பிட்டார். ஆனால், இப்போது அவ்வாறு செய்வது பொருத்தமானது அல்ல என்று குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி கூட்டங்களுக்கு செல்லும்போது அவர் என்ன பேசவேண்டும் என்பதனை எழுதிக்கொடுக்க வேண்டும். தமது அரசாங்கம் எந்தவொரு வரியையும் புதிதாக அறவிடவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். உண்மையில் ஜனாதிபதி எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளார் என்று தெரியவில்லை.
நாட்டில் எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை என்று தொடர்ந்து இப்போது டின் வரிசையும் உருவாகியுள்ளது. சரியான திட்டமிடல்கள் இல்லாவிட்டால் இறுதியில் மக்களே பாதிக்கப்படவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. எரிபொருளில் வரிகளை குறைத்தால் எரிபொருள் விலைகளை குறைக்க முடியும். ஆனால் அதற்கான வரிகளை அதிகரித்துள்ளது.
பால்மா விலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அவற்றுக்கு ஏற்றால் போன்று வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. ஆனால் சம்பளம் அதிகரிக்காமல் இருக்கின்றது. கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட போது தங்களுக்கு கூறாமல் அதிகரித்துள்ளனர் என்கின்றனர். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் திட்டமிடல்கள் என்ன? வெற்றிகரமான எந்தவொரு வேலைத்திட்டங்களையும் இந்த 2 வருடங்களில் அரசாங்கம் செய்யவில்லை. டித்வாவில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் கூடாரங்களில் இருக்கின்றனர். இவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.
அரசாங்கம் பொய்களை கூறுவதில் திறமையானது. மூன்றாவது வரவு செலவுத் திட்டமும் வரவுள்ளது. அதிலும் பொய்களே வரும். முதலீட்டாளர்கள் வருவதாக அமைச்சர் ஒருவர் கூறுகின்றார். ஆனால் அவ்வாறு வந்த முதலீட்டாளர்கள் யார் என்று முடிந்தால் கூறுங்கள் பார்க்கலாம். முதலீட்டாளர்கள் நாட்டில் இருந்து போகும் நிலைமையே இருக்கின்றது.
முதலீட்டாளர்களுக்கு விரும்பமில்லாத சட்டமூலங்களை கொண்டுவருகின்றன. பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப் பட வேண்டும். அன்று இருந்த பயங்கரவாத போராட்டங்களை விடவும் மாறுபட்ட அடிப்படைவாதஇ பயங்கரவாத போராட்டங்களுக்கு நாங்கள் முகம்கொடுக்க வேண்டும். இதுவே யதார்த்தமானது. தெற்காசிய வலயம் அடிப்படைவாதிகளின் கைகளுக்கு சிக்கி வருகின்றது. அதற்கு நாங்கள் முகம்கொடுக்க வேண்டும். அதற்கான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
அதற்காக அந்த சட்டத்தை கொண்டுவந்து பச்சைக் குத்தியுள்ள,தலைமுடி வளர்த்துள்ள இளைஞர்களை சிறையில் அடைக்கக்கூடாது. அன்று அரசாங்கத்துடன் மோதியவர்கள் இப்போதும் வீதியில் இருக்கின்றனர். அதற்கும் அப்பாலான ஒடுக்குமுறையை செயற்படுத்த நீங்கள் தயாராகுவதே காரணமாகும்.
பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் கொல்லப்படுகின்றனர். வீதியில் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். கொலை செய்யும் நோக்கத்திலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகின்றது. ஏன் இவ்வாறு நடக்கின்றது. திருகோணமலையிலும் இவ்வாறு சம்பவம் நடந்துள்ளது. இறுதியில் பொய் சாட்சிகளை தயாரிப்பதில் பொலிஸார் பழகியுள்ளனர். பொலிஸ் அரசியல்மயப்படுத்தப்படுவதால் இவ்வாறுதான் நடக்கும்.இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் அந்த வரவு செலவுத் திட்டத்தில் எத்தனை பொய்கள் உள்ளன என்று எண்ண வேண்டும் என்றார்.












