
முன்னாள் அமைச்சர் டிரான் அலாஸிற்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்த ஊடகவியலாளர்களுக்குச் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமை மற்றும் ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படாமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (3) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் அமைச்சர்கள், ஜனாதிபதிகள் என எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம். எவருக்கு எதிராகவும் சட்டம் வளைந்து கொடுக்காது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலாஸிற்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமை மற்றும் வேலை வாய்ப்ப இழப்புக்கள் கவலைக்குரிய விடயமாகும்.
மக்களுக்குச் சேவையாற்றிய பத்திரிகை நிறுவனங்கள் மூடப்படுவதும், அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு உரிய இழப்பீடோ அல்லது நிலுவைச் சம்பளமோ வழங்கப்படாமல் வீதிக்கு தள்ளப்படுவதும் கவலையளிக்கும் விடயமாகும். இது தொடர்பாகத் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கும் தொழில் அமைச்சிற்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எந்த நிறுவனத்தில் பணியாற்றியிருந்தாலும் ஊழியர்களுக்குரிய சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் பலன்கள் நிச்சயமாகப் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
முன்னாள் அமைச்சர் டிரான் அலாஸ் தொடர்பில் அரசாங்கம் அச்சப்படுகிறதா அல்லது தயக்கம் காட்டுகிறதா எனக் கேட்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை. முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என அனைவருக்கு எதிராகவும் நீதிமன்றங்கள் ஊடாகச் சட்டம் பாரபட்சமின்றிச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. ரணில் விக்ரமசிங்கவுக்காக கூட வளைந்து கொடுக்காத சட்டம், டிரான் அலாஸ் போன்ற தனிநபர்களுக்காக வளைந்து கொடுக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை. அவர்கள் எந்தவொரு அரசாங்கத்தில் எந்தப் பதவியில் இருந்தாலும், சாட்சிகள் வெளிவரும் போது சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றார்.












